சூடான் ராணுவ தாக்குதல் 130 கிளர்ச்சியாளர்கள் பலி
கார்டோம்: தெற்கு சூடானில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 130 கிளர்ச்சியாளர்கள் பலியானார்கள். ராணுவ தரப்பில் 14 வீரர்கள் உயிரிழந்தனர்.தெற்கு சூடான் அரசுக்கு எதிராக முன்னாள் துணை அதிபர் ரெயக் மாச்சர் ஆயுத போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த பல ஆண்டுகளாக அங்கு உள்நாட்டுபோர் நடைபெற்று வருகிறது. ஐ.நா. முயற்சியில் சில மாதங்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த வார இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதை தொடர்ந்து அரசு படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மீண்டும் யுத்தம் வெடித்துள்ளது. நைல் மாகாணத்தில் உள்ள ரெங்க் நகரை கிளர்ச்சியாளர்கள் நேற்று முன் தினம் முற்றுகை இட்டனர்.
அவர்களுக்கும் தெற்கு சூடான் மக்கள் விடுதலை படையினருக்கும் இடையே கடந்த இரண்டு தினங்களாக கடும் யுத்தம் நடைபெற்றது. இதில் கிளர்ச்சியாளர்கள் 130 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 14 வீரர்கள் பலியானார்கள். 17 பேர் காயம் அடைந்தனர். ராணுவத்தின் கை ஓங்க தொடங்கியதும் கிளர்ச்சியாளர்கள் பின்வாங்கி விட்டதாக ராணுவ செய்தி தொடர்பான பிலிப் அகுர் நேற்றிரவு செய்தியாளர்களிடம் கூறினார். எண்ணெய் கிணறுகள் நிறைந்த இந்த பிராந்தியத்தை ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாகவும், நகருக்குள் மறைந்திருக்கும் கிளர்ச்சியாளர்களை கண்டுபிடிக்க ராணுவம் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் பிலிப் மேலும் தெரிவித்தார்.