சென்னை: பிரபல சினிமா இயக்குனர் அமீர்ஜான் சென்னையில் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.மறைந்த இயக்குனர் கே.பாலசந்தரிடம் 40 வருடங்கள் இணை இயக்குனராகப் பணியாற்றியவர் அமீர்ஜான், (73). ரஜினி நடித்த ' சிவா' , கார்த்திக் நடித்த ‘நட்பு’, ‘வண்ண கனவுகள்’, ‘தர்மபத்தினி’, ‘உன்னை சொல்லி குற்றமில்லை’, முரளி நடித்த ‘பூவிலங்கு‘, ‘புதியவன்‘ மற்றும் ‘துளசி’, ‘ஓடங்கள்’, ‘தை மாசம் பூ வாசம்’, ‘வணக்கம் வாத்தியாரே’, ‘சின்ன சின்ன கண்ணிலே’ உட்பட தமிழில் 20 படங்கள் இயக்கியுள்ளார். தவிர ‘ரகுவம்சம்’, ‘கையளவு மனசு’ உட்பட பல டி.வி தொடர்களையும் இயக்கியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பக்கவாதம் தாக்கியதால் வலது கை மற்றும் கால் செயலிழந்தது. பேசவும் சிரமப்பட்டார். இதையடுத்து கோடம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று கவனித்துக்கொள்ளும்படி டாக்டர்கள் கூறியதையடுத்து வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். இன்று அதிகாலை 4 மணியளவில் அமீர்ஜான் மாரடைப்பில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர் இறுதி அஞ்சலி செலுத்தினர். அமீர்ஜானுக்கு மனைவி மக்பூல் ஜான், மகன் தவுலத் பாஷா, மகள் ஆயிஷா பானு உள்ளனர். நாளை காலை சாலிகிராமம் மசூதி அடுத்துள்ள கபரஸ்தானில் உடல் அடக்கம் நடக்கிறது.