இனிமேல்தான், உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில், நிஜமான போட்டி. காலிறுதி ஆட்டங்கள் நாளை துவங்குகின்றன. மெல்பர்னில் நாளை மறுநாள் வங்கதேசத்தை எதிர்க்கிறது இந்தியா. வங்கதேசச் சிங்கங்களை, இந்தியப் புலிகள் குறைத்து மதிப்பிட்டால் ஏமாறுவார்கள். வங்கதேசம் திறமையால் முன்னேறியது. அதிர்ஷ்டத்தால் அல்ல. டோனிக்கு இது தெரியும்.வங்கதேசத்துடன் ஒப்பிட்டால், இந்திய அணி பலமடங்கு மேல். காலிறுதியை மன திடத்துடன் எதிர்கொண்டால் போதும். அலட்சியத்தைத் தவிர்க்க வேண்டும். அதிக ரன் குவித்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ள மகமதுல்லாவை(344 ரன்கள்) சீக்கிரமே அவுட் செய்ய முனைப்புக் காட்ட வேண்டும். மற்ற வீரர்களையும் நங்கூரம் பாய்ச்ச விடக்கூடாது. அடுத்தடுத்த இடைவெளியில் சீராக விக்கெட் வீழ்த்தியாக வேண்டும்.
காலிறுதிக்கு முந்தைய ஆறு ஆட்டங்களிலும், அனைத்து விக்கெட்களையும் வீழ்த்திக் காட்டியிருக்கிறது இந்திய அணி. வேகக்கூட்டணி ஷமி, உமேஷ், மோகித், சுழல் கூட்டணி அஸ்வின், ஜடேஜா வங்கதேச வீரர்களையும் விட்டுவைக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ஷிகர், ரோகித், கோஹ்லி, ரகானே, ரெய்னா ஆகியோரது பேட்டிங் வலிமையுடன் தொடர்கிறது. போட்டியை வெற்றியுடன் முடித்துவைக்கும் டோனியின் பேட்டிங் பார்முலாவும் கைகொடுக்கிறது. குரூப் சுற்றில், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே அணிகளுடனான ஆட்டத்தில் இந்திய வீரர்கள் தடுமாறினாலும், வெற்றிக்கனியைப் பறிக்கத் தவறவில்லை.
காலிறுதிக்கு முன்னேறியதையே வங்கதேசத்தால் நம்ப முடியவில்லை. அதன் இலக்கு இறுதி ஆட்டம் அல்ல. அரையிறுதிதான். குறைந்த இலக்கு என்றாலும், காலிறுதியில் முழுத்திறமையையும் காட்ட வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்திய அணியின் இலக்கோ, சாம்பியன் பட்டத்தைத் தக்கவைக்க வேண்டும் என்பதுதான். இனிவரும் 3 ஆட்டங்களுமே இறுதி ஆட்டம் போன்றதுதான். ஒரேயொரு ஆட்டத்தில் தோற்றாலும், பழைய வெற்றிகளின் மதிப்பு பறந்துவிடும். இந்திய அணியின் வெற்றி தொடர்வதற்குக் காரணம், ஒருங்கிணைப்பான ஆட்டம். ரன்கள், விக்கெட் வேட்டைப் பட்டியலில் ஷமி தவிர (15 விக்கெட்) இந்திய வீரர்கள் முதல் 5 இடத்துக்குள் இல்லை. தனிப்பட்ட சாதனைகளை விட, அன்றைக்கு என்ன தேவையோ அதற்கான ஆட்டத்தை வழங்குவதுதான் வீரர்களின் சிறப்பு. அதை இந்திய வீரர்கள் சாதித்திருக்கிறார்கள்.அரையிறுதியில் யாரை எதிர்கொள்வோம், இறுதிப்போட்டியில் யாருடன் மோதுவோம் என்பது குறித்து இந்திய வீரர்கள் கவலைப்படத் தேவையில்லை. தேவை இன்னும் 3 வெற்றிகள். அது கடினம் என்றாலும், சாதித்தால்தான் சாம்பியன். இந்தியாவுக்கு அந்தத் தகுதி இருக்கிறது - கோட்டை விடாமல் இருந்தால்.