பொன்னேரி: பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ச்சி பெண் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் இந்த விபரீத சம்பவம் நடந்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பொன்னேரி அடுத்த தடபெரும்பாக்கம் சாய் நகரை சேர்ந்தவர் சம்பந்தம் (52). விவசாயி. இவரது மனைவி நாகு (48). இவர்களது மகள் பிரியா(20)வை திருவள்ளூரை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். கணவருடன் பிரியா வசிக்கிறார். மணிகண்டன் மெடிக்கல் கடை வைத்துள்ளார்.இதற்கிடையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனியாக சென்றார் நாகு. அதற்கு பிறகு சின்னகாவனத்தை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் (74) என்பவருடன் நாகு குடித்தனம் நடத்தி வந்தார். சந்திரசேகருக்கு ஏற்கனவே திருமணமாகி, அவரது மனைவி கவுசல்யா இறந்து விட்டார். ராஜ்குமார், ராஜேந்திரன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். அவர்களுக்கும் திருமணமாகி தனித்தனியாக வசிக்கின்றனர்.
இந்நிலையில் நாகுக்கு 2 வீடுகள் உள்ளதால் அதில் ஒரு வீட்டை எழுதி வாங்கி வா என பிரியாவிடம் மணிகண்டன் வற்புறுத்தியுள்ளார். உடனே அவரும் இதுபற்றி கேட்க இரு தினங்களுக்கு முன்பு வந்துள்ளார். அம்மாவிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வேறு வழியின்றி மகள் கேட்கிறாளே என சந்திரசேகரிடமும் ஒரு வீட்டை எழுதி கொடுக்கும்படி நாகு கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்றிரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நாகு, தனி அறையில் படுத்திருந்தார். இன்று காலையில் பிரியா எழுந்து பார்த்தார். மோட்டாருக்கு பயன்படுத்தப்படும் மின்சார வயரின் ஒரு முனை, நாகுவின் வயிற்றிலும் மற்றொரு முனை சுவிட்ச் போர்டிலும் சொருகப்பட்டிருந்தது. மின்சாரம் பாய்ச்சி நாகு கொலை செய்யப்பட்டிருந்தார். இதை பார்த்ததும் பிரியா அலறி துடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பின்னர் பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி சேகர், இன்ஸ்பெக்டர் சர்தார், எஸ்ஐ சுப்பிரமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.போலீசார் வழக்கு பதிந்து பிரியா மற்றும் மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் வீட்டில் இல்லை. அதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர்தான் கொலை செய்து விட்டு தப்பினாரா என்பது அவரை பிடித்தால்தான் தெரியும். அவரை தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.