பில்லா 2, நம்பியார் படத்தில் நடித்திருப்பவர் முன்னாள் இந்திய அழகி பார்வதி ஓமனகுட்டன் தனது உடல் உறுப்புகளை தானம் செய்தார். இதுபற்றி அவர் கூறியது: இந்த உலகைவிட்டு போனபிறகு நமது உறுப்புகளை தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்வதற்காக விட்டு செல்வது அழகான அனுபவம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் எனது அம்மா, அப்பா, சகோதரர் எல்லோருமே நான் உடல் உறுப்பு தானம் செய்யும் முடிவை எடுத்தபோது சம்மதம் தெரிவித்தனர். இந்த உலகில் எனக்கு துணையாக இருக்கும் பெரிய தூண்கள் அவர்கள்தான். இந்த உலகில் வாழும் குறுகிய காலத்தில் நாம் என்ன சாதித்திருக்கிறோம், அதற்கு அடையாளமாக எதை விட்டுச் செல்கிறோம் என்பது மிக அவசியம்.
அந்த வகையில் எனது பிறந்த நாளன்று உடல் உறுப்பு தான முடிவை நான் எடுத்தது உண்மையிலே நல்ல முடிவு என உணர்கிறேன். ஆடம்பரம் என்று எதையும் நான் விரும்புவது கிடையாது. என் பிறந்த நாளையும் எளிமையாக கொண்டாடவே ஆசைப்படுவேன். நண்பர்கள், குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்பார்கள். நிறைய பேரை அழைத்து விருந்து, மது என ஆடம்பரமாக செலவு செய்வது எனக்கு பிடிக்காது. அந்த பணத்தை தேவைப்படுபவர்களுக்கு உதவலாம் என்றுதான் எண்ணுவேன். புதிய படத்தில் நடிப்பதுபற்றி கேட்கிறார்கள். நல்ல சப்ஜெக்ட் வரும் வரை காத்திருக்க முடிவு செய்திருக்கிறேன்.இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.