பாசெல்: சுவிஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு பாட்மின்டன் போட்டியில் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் வென்றார்.சுவிட்ஜர்லாந்து நாட்டில் பாசெல் நகரில் சுவிஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்டு போட்டிகள் நடந்தது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி நேற்றிரவு நடந்தது. இதில் உலகின் 4ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 6ம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் அலெக்சனை சந்தித்தார். முதல் கேமில் அபாரமாக விளையாடி புள்ளிகளைச் சேர்த்தார் ஸ்ரீகாந்த். 8-8 என்ற புள்ளிகள் வரை இருவரும் சமநிலையில் இருந்தனர். இதன் பின்னால் ஸ்ரீகாந்ந் அதிரடியாக ஆடி முன்னிலை பெற்றார். கேமை வெல்லும் வரை அவர் முன்னிலையை இழக்கவில்லை.
ஆனால், இரண்டாவது கேமில் அலெக்சன் பதிலடி கொடுத்தார். இதனால், இந்த கேம் அலெக்சன் வசமானது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது கேமில் ஸ்ரீகாந்த் விஸ்வரூபம் எடுத்தார். அவரது அதிரடி ஸ்மாஷ்கள் தொடர்ந்து புள்ளிகளாக மாறின. இதன் மூலம் மூன்றாவது கேம் ஸ்ரீகாந்த் வசமானது. இந்தப்போட்டியில் 21-15, 12-21, 21-14 என்ற கேம் கணக்கில் வெற்றி பெற்று ஸ்விஸ் கிராண்ட் பிரிக்ஸ் கோல்ட் சாம்பியன் பட்டத்தை கிடாம்பி ஸ்ரீகாந்த் கைப்பற்றினார். சாம்பியன் பட்டம் வென்ற கிராம்பி ஸ்ரீகாந்த் கூறுகையில், ‘‘கடந்த சில மாதங்களாக நான் விளை யாடும் முறை மிகுந்த மகிழ் ச்சி அளிக்கிறது. லக்னோ மற்றும் பர்மிங்ஹாமில் நான் தோற்ற போட்டிகளில் கூட, வெற்றிக்கு மிகவும் நெருக்கமாக சென்றுதான் தோற்றுள்ளேன். அந்த அனுபவங்களின் மூலம் எனக்கு ஏராள மான சாதகமான அம்சங்கள் கிடைத்தன. இறுதிப்போட்டியில் இன்று உயர்தர ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்,’’ என்றார்.