நாகை: இயேசு கிறிஸ்து யூதர்களால் சிலுவையில் அறையப்பட்ட தினத்தை உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் புனித வெள்ளி நாளாக அனுசரித்து வருகின்றனர். உலக மக்களுக்காக இயேசு கிறிஸ்து, சிலுவைத் தண்டனையை மனமுவந்து ஏற்று கொண்ட இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் துக்க நாளாக கடைபிடிக்கின்றனர். இதற்காக கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவகாலமாக ஏற்று, விரதமிருந்து ஏசு கிறிஸ்துவை ஜபித்து வருவார்கள். சிலுவையில் அறையப்பட்ட 3ம் நாள் இயேசு கிறிஸ்து மீண்டும் உயிர்த்தெழும் நாளே ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. தவக்காலத்தின்போது கிறிஸ்தவர்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்த மாட்டார்கள். நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கடந்த 18ம் தேதி(புதன்) சாம்பல் புதன் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு பேராலயம், கீழ் மற்றும் மேல் கோவில்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.
திருப்பலிக்கு பிறகு, கடந்தாண்டு குருத்து ஞாயிறின் போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து சாம்பலாக்கி, அந்த சாம்பலை பாதிரிமார்கள் கிறிஸ்தவர்களுக்கு நெற்றியில் சிலுவையிட்டு பூசி விட்டனர்.4வது வெள்ளியான நேற்று மாலை பேராலய கீழ்கோவிலிலிருந்து ஏராளமான பக்தர்கள் சிலுவை ஏந்தி, ஏசுவின் பாடுகளை ஜெபித்த படி சிலுவைப்பாதை வழியாக மாதா கோவிலுக்கு சென்றனர். பின்னர் அங்கு திருப்பலி நடைபெற்றது. வரும் மார்ச் 29ம் தேதி குருத்து ஞாயிறு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
பேராலயத்தின் முன் ஏராளமான பக்தர்கள் குருத்தோலையுடன் கூடி, பேராலயத்திலிருந்து புறப்பட்டு கீழ்கோவில் வரை இயேசுவின் பாடுகளை நினைத்தும், மறுமையிலிருந்து தங்களை காத்தருள கோரியும் ஜெபித்தபடி ஊர்வலமாக செல்வார்கள். பின்னர் பேராலய கீழ்கோயில், மேல் கோயில் ஆகியவற்றில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம்,இந்தி ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறும். ஏப்ரல் 2ம் தேதி மாலை பேராலய கலையரங்கில் பாதம் கழுவுதல் நிகழ்ச்சி நடைபெறும். 3ம்தேதி தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.