மாலே: மாலத்தீவில் முன்னாள் அதிபர் முகமது நஷீத் பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. இதனால் அவருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை வழங்குவதாக அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.இந்திய பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு அமைந்துள்ளது. இந்நாடு சுதந்திரம் அடைந்ததும் முதல் அதிபராக முகமது நஷீத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளின் தலைவராகவும் திகழ்ந்தார். மேலும் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் நண்பராகவும் திகழ்ந்து வந்தார்.
முகமது நஷீத்தின் ஆட்சிக் காலத்தில் பல்வேறு தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்றன. அவரது ஆதரவாளர்களும் கட்சியினரும் பல்வேறு வன்முறை தாக்குதல்களை மேற்கொண்டனர். இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி அப்துல்லா முகமதுவை கடந்த 2012-ம் ஆண்டு கைது செய்து, முகமது நஷீத் முறைகேடான முறையில் நீக்கினார்.இதற்கு மாலத்தீவில் பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முகமது நஷீத் பதவி விலகினார். தற்போது புதிய அதிபராக பொறுப்பேற்ற அப்துல்லா யாமின், முகமது நஷீத்தின் தீவிரவாத செயல்பாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் முகமது நஷீத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் மீது தீவிரவாத தடுப்பு பிரிவின்கீழ் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. எனினும், தன்மீது குற்றம் சாட்டப்பட்ட அனைத்தையும் முகமது நஷீத் 3 பேர் கொண்ட நீதிமன்றத்தில் மறுத்தார்.இந்நிலையில், முகமது நஷீத்தின் மீது குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் நீதிபதி நீக்கம் உட்பட அனைத்து தீவிரவாத நடவடிக்கைகளும் போலீசாரால் நிரூபிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு 13 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாக நேற்று நீதிபதி அப்துல்லா தீதீ தீர்ப்பு வழங்கினார்.