சென்னை: தமிழக காங்கிரஸ் மாநில பொருளாளராக நாசே ஜெ.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.தமிழக காங்கிரசில் காலியாக இருந்த பதவிகளுக்கான பட்டியலை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதலுடன் அகில இந்திய பொதுச் செயலாளர் ஜனார்த்தன திவேதி டெல்லியில் நேற்று வெளியிட்டார். தமிழக காங்கிரசின் முக்கிய பதவியான மாநில பொருளாளர் பதவிக்கு நாசே ஜெ.ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு அடுத்தபடியாக மாநில பொருளாளர் பதவி கருதப்படுகிறது. கட்சியின் வரவு செலவு கணக்குகள் அனைத்தும் மாநில பொருளாளர் தான் நிர்வகிப்பார். கட்சி தொடர்பான எந்த செலவாக இருந்தாலும், வரவாக இருந்தாலும் அனைத்தும் மாநில பொருளாளர் தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்த பதவியில் மூப்பனார் மற்றும் ஜி.கே.வாசன் ஆதரவாளர்களே இருந்து வந்தனர். கடைசியாக வாசன் ஆதரவாளர் கோவை தங்கம் இருந்தார். அவர் தமாகாவுக்கு போனதால், அந்தப் பதவி காலியாக இருந்தது. அந்தப் பதவிக்கு சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தீவிரமாக முயற்சி செய்து வந்தார். ஆனால் அவருக்கு வழங்கப்படவில்லை. இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நாசே ஜெ.ராமச்சந்திரன் சிறந்த சமூக சேவகர் மற்றும் கல்வியாளர். படித்த இளைஞர்களுக்கான ‘நாசே‘ எனும் சுய வேலைவாய்ப்பு இயக்கத்தை நீண்ட காலமாக நடத்தி வருகிறார். இவரது சமூக சேவையை நேரில் ஆய்வு செய்த இங்கிலாந்து நாட்டில் உள்ள புகழ் பெற்ற யார்க் செயின்ட் ஜான் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளது. அதேபோன்று கட்சிப் பணியிலும் தீவிர கவனம் செலுத்தி வந்தார். 1984ம் ஆண்டு நடைபெற்ற மேலவைத் தேர்தல் மற்றும் 1989ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிடும் வாய்ப்பை பெற்றார். இவர் சென்னை மற்றும் உத்திரபிரதேசத்தில் பிரபல கல்வி நிறுவனத்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.அமெட் பல்கலைக்கழக சேர்மன், சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் கல்லூரியின் சேர்மன், நாசே இயக்கத்தின் சேர்மன் ஆகிய பதவிகளை வகித்து வருகிறார்.