சென்னை: பல வடிவங்களில் இட்லிகளை தயார் செய்து பல்வேறு சாதனைகளை படைத்தவர் டாக்டர் இட்லி இனியவன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 124 கிலோ மாவில் ஒரே இட்லி செய்து சாதனை புரிந்தார். இப்போது தனது சாதனையின் சிகரமாக, பல்வேறு வடிவங்களில் பல்சுவை மிகுந்த 1000 வகை இட்லி தயாரிக்க உள்ளார். வியாசர்பாடி மகாகவி பாரதிநகர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள விவேகானந்தா வித்யாலயா பள்ளி வளாகத்தில் நாளை(15ம் தேதி)மாலை 3 மணிக்கு தனது சாதனை நிகழ்ச்சியை தொடங்கும் டாக்டர் இனியவன் இரவு 9 மணி வரை பல வடிவில் பல்வேறு சுவையில் இட்லி தயாரிக்கிறார். சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற ஊட்டச்சத்துக்கள், முளை கட்டிய பல தானிய இட்லி மற்றும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள கேரட், பீட்ரூட் இட்லி, சாக்லேட் இட்லி, இளநீர் இட்லி, ஆரஞ்சு இட்லி, ஆப்பிள் இட்லி, மூலிகை இட்லி வகைகள் செய்வது குறித்து விழிப்புணர்வு கண்காட்சி இடம்பெறுகிறது.
நீதிபதிகள் டி.என்.வள்ளிநாயகம், ஞானபிரகாசம் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், முன்னாள் தமிழக அரசு தலைமை செயலாளர் ஹரிபாஸ்கர், வணிகர் சங்க தலைவர் வெள்ளையன், எம்எல்ஏக்கள் ஏ.நாராயணன், சவுந்தரராஜன், ஸ்டன்ட் மாஸ்டர் ஜாக்குவார்தங்கம், தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் முன்னேற்ற சங்க தலைவர் ராஜாமணி ஐயர், பள்ளி முதல்வர்கள் சேதுபாஸ், டாக்டர் மாலதிஸ்ரீ, ஆர்.கே.நகர் தொகுதி வியாபாரிகள் சங்க செயலாளர் என்.ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.