வெளிநாடுகளில் பலாத்காரம் குறித்து இங்கிலாந்து மகள் ஆவணப்படம் : நிர்பயா படத்திற்கு பதிலடி
புதுடெல்லி: டெல்லி மருத்துவ மாணவியின் ஆவணப்படத்திற்கு பதிலடியாக இந்தியர் ஒருவர் இங்கிலாந்து மகள் என்ற தலைப்பில் மேற்கு நாடுகளின் பலாத்கார சம்பவங்கள் குறித்து ஆவணப்படம் ஒன்றை தயாரிக்கிறார்.டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. இந்த சம்பவத்தில் 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். குற்றவாளிகளில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது போக மீதம் உள்ள 5 பேரில் 4 பேர் திகார் சிறையிலும், ஒருவர் சிறார் காப்பகத்திலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 8ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிபிசி பெண் செய்தியாளர் லெஸ்லி உத்வின் இந்தியாவின் மகள் என்ற பெயரில் நிர்பயா சம்பவத்தை பற்றி ஆவணப்படம் எடுத்தார்.
அதில் குற்றவாளி முகேஷ் சிங் அளித்த பேட்டியில் பெண்களுக்கு எதிராக கூறிய கருத்துகள் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தை ஒளிபரப்ப மத்திய அரசு தடை விதித்தது. பிபிசிக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்திய ஆண்களை கொச்சைப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு பதிலடியாக இங்கிலாந்தின் மகள் என்ற பெயரில் இந்தியரான ஹர்வீந்தர் சிங் என்பவர் ஆவணப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அதில் மேற்கு நாடுகளின் பாலியல் பலாத்கார சம்பவங்களை தோலுரித்துள்ளார்.
இங்கிலாந்தில் மட்டும் ஒரு நாளைக்கு 250 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த படத்தில் பாதிக்கப்பட்ட 10 சதவீதம் பெண்கள் தங்களது அனுபவங்களை தெரிவித்துள்ளனர் என்கிறார் ஹர்வீந்தர் சிங்.இங்கிலாந்திலும் பெண்கள் பலாத்காரத்திற்கு ஆளாவதற்கு காரணம் பெண்கள்தான் என்று மூன்றில் ஒரு பங்கு ஆண்கள் கருதுகின்றனர். அங்கு பெண்கள் கொலை செய்யப்படும் விகிதம் குறைவாக இருந்தாலும் பலாத்கார சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டுகிறார்.