பாகிஸ்தானுக்கு அமெரிக்க தூதராக டேவிட் ஹேல் நியமனம் - அதிபர் ஒபாமா பரிந்துரை
வாஷிங்டன்-பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதராக டேவிட் ஹேலை நியமனம் செய்ய அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். அவரது நியமனம் குறித்து இன்று செனட் சபையில் முடிவு செய்யப்படுகிறது என்று வெள்ளை மாளிகை வட்டாரம் தகவல் தெரிவிக்கிறது.பாகிஸ்தானில் தற்போது அமெரிக்க தூதராக கேமரூன் முன்டர் பணியாற்றி வருகிறார். அவரது பதவிக் காலம் வரும் ஜுன் மாதம் நிறைவு பெறுவதால், புதிய தூதராக டேவிட் ஹேலை நியமனம் செய்யலாம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா பரிந்துரை செய்துள்ளார். தற்போது லெபனான் நாட்டு அமெரிக்க தூதராக டேவிட் ஹேல் பணியாற்றி வருகிறார்.
பாகிஸ்தானுக்கு டேவிட் ஹேல் நியமனம் குறித்து இன்று அமெரிக்க செனட் சபையில் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. செனட் சபையில் இன்று டேவிட் ஹேலின் நியமனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதும், விரைவில் அவர் பாகிஸ்தானில் அமெரிக்க தூதராக பொறுப்பேற்பார் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்றிரவு செய்தி வெளியிட்டது.
பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதராக நியமிக்கப்பட இருக்கும் டேவிட் ஹேல், கடந்த 1984&ம் ஆண்டு அமெரிக்க வெளியுறவு பணியில் சேர்ந்தார். கடந்த 2005 முதல் 2008&ம் ஆண்டு வரை ஜோர்டான் தூதராகவும், பின்னர் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன வெளியுறவு துறை தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அதேபோல் பஹ்ரைன், லெபனான் மற்றும் சவுதி அரேபியாவின் தூதராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.