பாசத்தால் பிணையாவிட்டாலும், பாச மலர்களாக அடையாளம் காட்டுவதில் அரசியலுக்கு ஈடு இணையில்லை. மக்கள் ஜனநாயகக் கட்சி(பிடிபி) பாரதிய ஜனதாவுடன் நட்பு பாராட்டியதற்குக் காரணம், காஷ்மீர் ஆட்சி. கூட்டணி ஆட்சி என்பதற்காக பா.ஜ.வுடன் சலாம் போட பிடிபி தயாராக இல்லை. என் வழி தனி வழி என்கிறார் முதல்வர் முப்தி முகமது சயீத்.பிடிபியும், பா.ஜவும் அதிக இடங்களைக் கைப்பற்றினாலும், ஆட்சி அமைக்க முடியவில்லை. உமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக்கட்சி(என்சிபி), காங்கிரசுடன் கைகோர்த்தாலும், பிடிபியோ, பா.ஜவோ பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. தொங்கு சட்டசபை, மீண்டும் தேர்தல் போன்ற காட்சிகள் அரங்கேறுவது அர்த்தமில்லாததுதான். பிடிபி மீது பா.ஜ காட்டிய நேசம், இதன் அடிப்படையில்தான்.
பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருந்தாலும், காஷ்மீரில் அமைதியான தேர்தலுக்கு பாகிஸ்தானும், தீவிரவாதிகளும் ஒத்துழைத்ததாக முதல்வர் முப்தி சிலாகித்தார். மேடையிலேயே நெருடலை ஏற்படுத்தினாலும், நா தவறிச் சொல்லியிருப்பார் என்று பா.ஜ சமாளிக்க முயன்றது. ஆனால், சொன்னது சொன்னதுதான் என்று முப்தி கூறிவிட்டார். முதல் கோணல் என்றாலும் முற்றிலும் கோணல் ஆகிவிடாது என்று கூட்டணியில் இருக்கும்போது சொல்லித்தானே ஆக வேண்டும்... கோணலை நிமிர்த்த பா.ஜ மல்லுக்கட்டுகிறது.
பிரிவினைவாதத் தலைவர் மஸ்ரத் ஆலமை விடுவித்து முப்தி உத்தரவிட, அடுத்த தலைவலி துவங்கிவிட்டது. ‘தேசத்துக்கு எதிராக திரும்பிப்போ இந்தியா போராட்டத்தில் ஈடுபட்டவர் ஆலம். அவர் விடுவிக்கப்பட்டது அவமானம். இந்த முடிவுக்கு பா.ஜவின் சம்மதத்தை முப்தி பெறவே இல்லை‘ என்று காஷ்மீர் மாநில பா.ஜவினர் கொந்தளிக்கின்றனர். ‘ஆலமின் விடுதலையை உரிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும். குறைந்தபட்ச செயல்திட்டத்தில் இது முக்கிய இடம் பெற்றுள்ளது. மாநிலத்தில் அமைதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இதைக் கருத வேண்டும். பிரிவினைவாதத் தலைவர்கள் உள்பட அனைத்து தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால், அதற்குரிய இடம் சிறைச்சாலையாக இருக்க முடியாதே' என்று பிடிபி கூறுகிறது.
இத்தனைக்கும் ஆலம் தனது விடுதலையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ‘நாங்கள் மாறப்போவதில்லை. சட்டப்படி கிடைத்த விடுதலை இது‘ என்று சவால் விடுகிறார் ஆலம். ஆலம் விடுதலை குறித்து அறிக்கை கேட்டு மத்திய அரசு, மாநில அரசுடன் மோதலைத் துவக்கிவிட்டது. பொருந்தாக் கூட்டணி நீண்ட நாட்கள் நீடிக்காது என்பது நிதர்சனம். பெரும்பான்மை கிடைக்காவிட்டால், வளைந்துகொடுத்துத்தான் போக வேண்டும். ஆனால், வளைந்துகொடுப்பதற்கும் அளவு இருக்கிறது. அந்த எல்லையை பிடிபி தாண்டியிருப்பதாக பா.ஜ. கருதினாலும் வீராப்பு பேச முடியாததுதான், காஷ்மீர் அரசியல்.