திருச்சி: ஸ்ரீரங்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு நேற்று மாலை மர்ம கடிதம் வந்தது. அந்த கடிதத்தில், ‘திருச்சி மாவட்ட போட்டோ கடை சங்க தலைவர் தியாகராஜன் முன்னிலையில் இந்த கடிதம் எழுதப்படுகிறது. எனக்கு புத்தூரில் முருகன் கடை வைத்திருக்கும் மோகன், முரளி ரூ.7 லட்சம் தரவேண்டும். அவன் அண்ணன் புருஷோத்தமனுக்கு கூட இது தெரியும். ஏற்கனவே புருஷோத்தமன் ரூ.2 லட்சம் வாங்கி தராமல் ஊரை விட்டு ஓடி விட்டான். தலைமறைவாக இருந்த புருஷோத்தமனை போட்டோ சங்கத் தலைவருக்கு தெரியும். தரவேண்டிய பணத்தை 9.3.2025 க்குள் தரவேண்டும். இல்லை என்றால் 18.3.2025 அன்று ஏற்கனவே கூறியபடி சக்திவாய்ந்த வெடிகுண்டு ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வெடிக்கும். இப்படிக்கு கே.தியாகராஜன், தனபால் போட்டோ கடை, ராகவேந்திரபுரம் ஆர்ச், ஸ்ரீரங்கம்‘ என எழுதப்பட்டிருந்தது. மேலும் கடிதத்தில், ‘புருஷோத்தமன் போட்டோ எடுப்பவன், அடிக்கடி ஆள் வைத்து மிரட்டுகிறான்.
இதனால் என் உயிருக்கு ஆபத்து என்பதை கவனத்துக்கு கொண்டு வருகிறேன்‘ என கூறப்பட்டிருந்தது. கடிதம் குறித்து நிலைய அலுவலர் உயரதிகாரி மற்றும் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்தார். ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இதே முகவரியை குறிப்பிட்டு திருச்சி அரசு மருத்துவமனை, சத்திரம் பகுதியில் உள்ள டெய்லர் கடை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி ரயில் நிலையங்கள், அரியலூர் மாவட்டம் கல்லக்குடி, பழங்காநத்தம் ஆகிய ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்தது. ரயில்வே எஸ்பி ஆனிவிஜயா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். விரைவில் குற்றவாளி சிக்குவார் என போலீசார் தெரிவித்தனர். நேற்று வரை அனுப்பப்பட்ட கடிதங்களின் எண்ணிக்கை 9 ஆகும்.