பணிக்கு வந்த 4 நாளில் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் : ஆசிரியருக்கு மக்கள் தர்மஅடி : அரசு பள்ளியில் பரபரப்பு
தரங்கம்பாடி: நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த காலமாநல்லூரில் அரசு தொடக்க பள்ளி உள்ளது. ஜவஹர் தலைமையாசிரியராகவும், அசோக் ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர். 45 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.தலைமையாசிரியர் ஜவஹர் விடுப்பில் உள்ளார். அருகில் உள்ள ஆக்கூரை சேர்ந்த பார்த்திபன் என்பவரை ரூ.1000 சம்பளத்திற்கு அங்கு ஆசிரியராக பணி செய்யும்படி ஜவஹர் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து பார்த்திபன் கடந்த 4 நாட்களாக அங்கு ஆசிரியராக வேலை செய்து வந்தார்.ஆசிரியர் பார்த்திபன் 2 மற்றும் 3ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மாணவிகள் சிலர் தங்கள் பெற்றோரிடம் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், ஊர் மக்களும் நேற்று பள்ளிக்கு திரண்டு வந்து அங்கிருந்த பார்த்திபனை சரமாரியாக அடித்து உதைத்தனர். அப்போது அங்கு வந்த தலைமையாசிரியர் ஜவஹரும் தாக்கப்பட்டார். பார்த்திபன் தப்பி ஓடினார்.
ஜவஹரை பள்ளியில் மக்கள் சிறை வைத்தனர். செம்பனார்கோவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் குமார் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினார். அவரிடம் பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஏற்பட்ட நிலை குறித்து கூறி அழுதனர். பார்த்திபனை ஆசிரியராக தன்னிச்சையாக நியமித்த தலைமையாசிரியர் ஜவஹர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.உதவி தொடக்க கல்வி அலுவலர் குமார் கூறுகையில், ‘இச்சம்பவம் வருந்தத்தக்கது. இது குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடித்து வைக்கப்பட்டது. தன்னிச்சையாக ஆசிரியரை நியமித்த தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கல்வி அதிகாரிக்கு பரிந்துரைக்கப்படும்‘ என்றார். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் கலைந்துசென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.