மதுரை: கிரானைட் குவாரிக்காக உரிமதாரர்கள் பல ஆயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கியது தொடர்பாக பத்திரப்பதிவு அதிகாரிகளிடம் சகாயம் சரமாரியாக கேள்விகள் எழுப்பினார். பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி, கால அவகாசம் கேட்டனர்.மதுரை மாவட்டத்தில் நடந்த ரூ.16 ஆயிரம் கோடி கிரானைட் முறைகேடு தொடர்பான ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் 8ம் கட்ட விசாரணை நேற்று 8வது நாளாக தொடர்தது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் சகாயம் அனுப்பிய நோட்டீசுக்கு அந்த துறை அதிகாரிகள் நேரில் ஆஜராகி பதிலளித்து வருகின்றனர். பத்திர பதிவு மதுரை மண்டல துணைத்தலைவர் ராஜசேகரன், மாவட்ட பதிவாளர் கண்ணன் மற்றும் ஓய்வு பெற்ற சார்பதிவாளர் உள்ளிட்ட 15 சார்பதிவாளர்கள் மற்றும் விஏஓக்கள் நேற்று ஆஜராயினர்.
அவர்களிடம் சகாயம், ‘கிரானைட் குவாரிக்காக பல்லாயிரம் ஏக்கர் விவசாய விளைநிலங்கள், குடியிருப்புகள் மிரட்டி காலி செய்யப்பட்டு, அடிமாட்டு விலைக்கு வாங்கி சுருட்டப்பட்டதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எந்த பகுதியில் எவ்வளவு இடம், யார், யார், என்ன விலைக்கு வாங்கி உள்ளனர்? அந்த பகுதியில் அப்போது அரசின் விலை மதிப்பீடு எவ்வளவு’ உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சரமாரியாக கேட்டார். இதற்கு அதிகாரிகள் மழுப்பலான பதில்களை தெரிவித்தனர்.ஆனால் சகாயம் ‘எனது கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமான பதில்களை ஆவண ஆதாரங்களுடன் தாருங்கள். இல்லை என்றால் சொல்லி விடுங்கள்’ என கிடுக்கிப்பிடி போட்டார். உடனே பத்திர பதிவு அதிகாரிகள், ‘அதற்கு கால அவகாசம் தேவை’ என்றனர். அதை ஏற்று சகாயம் அவகாசம் அளித்தார். விசாரணை உச்சகட்டத்தை எட்டிய நிலையில் கிரானைட் விவகாரம் தொடர்பான மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகளிடம் ஆவண ஆதாரங்களை பெறுவதில் சகாயம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார்.