சென்னை: கிருஷ்ணா நீர் பங்கீடு தொடர்பாக ஓப்பந்தம் போடப்பட்டு 19 ஆண்டுகளாகியும், தற்போது வரை தமிழகத்திற்கு முழுமையான நீரை ஆந்திர அரசு வழங்கவில்லை. சென்னை நகரின் குடிநீர் தேவையை போக்குவதில் முக்கிய நீர் ஆதாரங்களாக பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் உள்ளன. இதுதவிர கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியில் இருந்தும், ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்தும் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. ஆந்திர அரசு தெலுங்கு கங்கை திட்டம் மூலம் ஒப்பந்தபடி, கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 12 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும்.
முதல் தவணைக்காலமான ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, இரண்டாவது தவணைக்காலமான ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். குறிப்பாக, ஓப்பந்தம் போடப்பட்டு கடந்த 19 ஆண்டுகளில் கிருஷ்ணா தண்ணீரை தமிழகம் முழுமையாக பெற்றதில்லை என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக தமிழக ஆந்திர அரசுகளுக்கு இடையே கடந்த 1983ல் ஏப்ரல் 18ம் தேதி கிருஷ்ணா நதி நீர் ஓப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 15 டிம்சி தர வேண்டும். இதில், 3 டிஎம்சி சேதாரம் போக ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் 4 டிஎம்சி நீர் தர முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்ட் வரை 152 கி.மீ தூரத்திற்கும் கால்வாய் அமைக்கும் பணி 13 ஆண்டுகளாக நடந்தது. பின் பணிகள் முடிந்ததும் முதன்முறையாக கடந்த 1996 முதல் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த 19 ஆண்டுகளில் ஒரு முறை கூட 12 டிஎம்சி நீர் ஓப்பந்தப்படி கிடைக்கவில்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் கிருஷ்ணா நீர் ஓப்பந்தப்படி பாதியளவு கூட வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 2014 முதல் தற்போது வரை 4.4 டிஎம்சி வழங்கப்பட்டுள்ள நிலையில், ஏப்ரல் மாதம் முடிவதற்குள் இரண்டு டிஎம்சி கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது‘ என்றார்.