மூளைச்சாவு அடைந்தார் எடிட்டர் கிஷோரின் உடல் உறுப்புதானம்
சென்னை: ஆடுகளம், ஈரம், பயணம், காஞ்சனா, ஆரோகணம், எங்கேயும் எப்போதும், பரதேசி, எதிர்நீச்சல் உள்பட பல்வேறு படங்களுக்கு எடிட்டராக (படத்தொகுப்பாளர்) பணியாற்றியவர் கிஷோர் (37). ஆடுகளம் படத்திற்காக சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது பெற்றார். சமீபத்தில் அவர் ‘விசாரணை‘ படத்திற்காக பணியாற்றிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூளையில் செல்லும் நரம்பில் அடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் கோமா நிலைக்கு சென்றார். அறுவை சிகிச்சை செய்து அடைப்பு நீக்கப்பட்டது. ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் இல்லை. ஒருவாரமாக கோமா நிலையில் இருந்த கிஷோருக்கு நேற்று மூளைச் சாவு ஏற்பட்டதாக டாக்டர்கள் கூறினர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்ய முன்வந்தனர். அவரது இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் அரசு பொது மருத்துவமனையில் இன்று பிரித்தெடுக்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது.