குற்றவாளியைத் திருத்தக்கூடிய இடமாக சிறைச்சாலை இருந்தால் சிறப்பு. ஆனால், திகார் சிறைச்சாலை அப்படிப்பட்டதல்ல. பலாத்காரக் குற்றவாளி முகேஷ் சிங்கிடம் போதனையை எதிர்பார்க்க முடியாது. 2012ம் ஆண்டு, டெல்லியில் ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண் நிர்பயா(பெயர் மாற்றம்), பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த வழக்கின் குற்றவாளியான முகேஷ், பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, ‘இந்தியாவின் மகள்' என்ற தலைப்பிலான ஆவணப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. ‘பலாத்காரத்தின்போது சத்தம் போடாமல் இருந்திருந்தால், அந்தப்பெண்(நிர்பயா) உயிரிழந்திருக்க மாட்டார். நாகரீகமான பெண், இரவு 9 மணிக்கு சாலையில் நடமாட மாட்டார். பலாத்காரத்துக்கு ஆணை விடப் பெண்தான் காரணம். ஆணும், பெண்ணும் சமம் அல்ல...' இப்படி விரிகிறது குற்றவாளியின் பேட்டி. குற்றவாளியிடம் பேட்டி எடுக்க சிறை அதிகாரிகள் எப்படி அனுமதி அளித்தார்கள் என்பதில் துவங்கி, தற்போது எல்லாமே சர்ச்சைகளாக மாறியிருக்கின்றன.
‘நிர்பயாவின் பெயர், புகைப்படத்தை பிபிசி நிறுவனம் பயன்படுத்தியுள்ளது. இந்திய அரசுக்குச் சவால் விடும் வகையில் செயல்பட்டுள்ளது‘ என்று கொந்தளிக்கிறார் நிர்பயாவின் தந்தை.மத்திய அரசு தடை விதித்தாலும், ‘யூ டியூப்‘ வலைதளத்தில் ஆவணப்படம் வெளியாகிவிட்டது. தற்போது ‘யூ டியூப்' வலைதளத்தில் படம் நீக்கப்பட்டாலும், பேஸ்புக் உள்ளிட்ட வலைதளங்கள் மூலம், இதைப் பலர் பகிர்ந்துகொண்டனர். இந்தியாவில் ஒளிபரப்ப மாட்டோம் என்று பிபிசி அறிவித்தாலும், இங்கிலாந்தில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு விட்டது. பிபிசிக்கு நோட்டீஸ் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. ஆவணப்படம் ஒளிபரப்ப விதித்த தடை கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று சர்வதேச அளவில் விவாதங்கள் துவங்கியுள்ள நிலையில், இது உணர்வுப்பூர்வமான விஷயம் என்ற அடிப்படையில், மத்திய அரசின் தடை ஏற்புடையதுதான். நிபந்தனைகளை மீறி ஆவணப்படம் எடுக்கப்பட்டதாக கருதும் மத்திய அரசு, இதன் இயக்குனர் லெஸ்லி உத்வின் மீதும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்துவருகிறது.
‘பெண்கள் மீதான வன்கொடுமைகள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதாக இருந்தால், பலாத்காரக் குற்றவாளிகளைத் தூக்கில் போடாதது ஏன்?‘ என்றும் நாடு முழுவதும் ஆவேசக்குரல்கள் ஒலிக்கின்றன. ‘கடவுள் ஒரு கொலை செய்ய வாய்ப்புக்கொடுத்தால், பலாத்காரக் குற்றவாளியைக் கொல்வேன்‘ என்று நடிகை டாப்சி கொந்தளிக்கிறார். ஆனால், ஜனநாயக நாட்டில் உடனடி நடவடிக்கைகள் பல நேரங்களில் சாத்தியப்படுவதில்லை. பழிக்குப் பழி, ரத்தத்துக்கு ரத்தம் என்பது இந்தியாவின் சட்டம் அல்ல. குற்றவாளிகள் திருந்துவதற்காகத் தான் தண்டனையே. ஆனால், குற்றவாளிகள் இதை உணர்வதற்கான வழிமுறைகள்தான் இல்லை.