லக்னோ. மதியம் 1 மணி. பாபுஜங் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. தனியார் வங்கி ஏடிஎம்-ல் பணம் நிரப்பும் பணியில் 3 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். திடீரென பைக்கில் 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்தபடி வருகின்றனர். ஏடிஎம்-ல் நுழைந்து, துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக்கொன்று விட்டு, ரூ.50 லட்சம் பணத்துடன் தப்பிவிடுகின்றனர்.போலீஸ் வாரக் கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், இந்தக் கொடூர சம்பவத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை. உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் அதிர்ந்துபோய்விட்டார். குற்றவாளிகளை 15 நாளுக்குள் பிடித்து, பணத்தையும் மீட்க டி.ஜி.பி ஏ.கே.ஜெயினுக்கு உத்தரவிட்டார். ‘சிசிடிவி கேமரா மூலம் முக்கிய தடயம் சிக்கியிருக்கிறது. விரைவில் குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம்‘ என்று டிஜிபி சொல்கிறார்.
லக்னோவில் இது 2வது சம்பவம். கடந்த ஜனவரி 17ம் தேதி லக்னோவில் பணம் நிரப்புவதற்காக ஏடிஎம் வந்த வேனில் இருந்து ரூ.1.5 கோடியைக் கொள்ளையர்கள் சுருட்டிச் சென்றனர். நல்ல வேளை. யாரும் கொல்லப்படவில்லை. டெல்லியில் கடந்த ஆண்டு, ஏடிஎம்-ல் காவலாளியைச் சுட்டுக்கொன்று ரூ.1.5 கோடியைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்தது. இதுபோன்ற சம்பவங்கள், ஏடிஎம்கள் எந்தளவு பாதுகாப்புடன் இயங்குகின்றன என்பதைக் காட்டுவதாக இருக்கிறது. பெங்களூருவில் ஏடிஎம்-ல் பணம் எடுக்க வந்தபெண், கொள்ளையனால் தாக்கப்பட்டது உள்ளிட்ட ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஏடிஎம்களில் பணம் எடுத்து திரும்புபவர்களிடம் கொள்ளையடித்த சம்பவங்களும், ஏடிஎம்-ல் பணம் நிரப்ப வாகனம் செல்லும்போது பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. கிருஷ்ணகிரி அருகே கூட்டுறவு வங்கியில் 6000 பவுன் நகை, திருச்சி அருகே கூட்டுறவு வங்கியில் 50 கிலோ நகைகள் சமீபத்தில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
கொள்ளையர்களின் நோக்கம், ஒரே நேரத்தில் பெரிய அளவு தொகையைக் கொள்ளையடிப்பதாக இருக்கிறது. இதற்காக ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை. துப்பாக்கியைக் காட்டுவதால், உயிருக்குப் பயந்து, அவர்களை எந்த சூப்பர்மேனும் தடுக்க முன்வருவதில்லை.கொள்ளையர்கள் நினைத்தால், எங்கும், எந்தக் கொடூரத்தையும் நிகழ்த்த முடியும் என்பதே நிதர்சனம். நவீன உலகில் முறைகேடான வழியில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் எளிதாகக் கிடைக்கின்றன. இதுபோன்ற கொள்ளைச் சம்பவங்களின்போது, விலைமதிப்புள்ள மனித உயிர்கள் பலியாவதைத் தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கொள்ளைச்சம்பவங்கள், முன்கூட்டியே திட்டமிடப்படுபவை. குறிப்பாக பணம் கொண்டுசெல்லப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் கொள்ளையர்களுக்கு முன்பே தெரிந்துவிடுகிறது. ரகசியம் பாதுகாக்கப்படாததால், கொள்ளை எளிதாகிறது.எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு, விழிப்புணர்வுதான் பெரிதும் துணைபுரியும். குற்றவாளிகளை உடனடியாகக் கண்டறிவதற்கான போலீஸ் நடவடிக்கைகளும் முடுக்கப்பட வேண்டும்.