போகோஹரம் தீவிரவாதிகள் 300 பேர் சுட்டு கொலை
அபுஜா: நைஜீரியாவில் போகோஹரம் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் நேற்று நைஜீரிய ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்குதலில் 300-க்கும் மேற்பட்ட போகோஹரம் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.நைஜீரியாவின் பல்வேறு பிராந்தியங்களில் முஸ்லிம் மதத்தினரை ஒருங்கிணைத்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்றும், நைஜீரியாவின் மதவாத சக்திகள் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்றும் கடந்த 6 ஆண்டுகளாக போகோஹரம் தீவிரவாதிகள் ஆயுத தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களின் தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், நைஜீரியாவில் அடுத்த மாதம் 28-ம் தேதி அதிபர் தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. ஆனால், நைஜீரியாவில் என்றுமே தேர்தலை நடத்தவிட மாட்டோம். இங்கு எங்களை போன்ற மதவாத சக்திகள்தான் ஆட்சி செய்ய வேண்டும் என்று போகோஹரம் தீவிரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் செகாவு நேற்று வீடியோவில் செய்தி வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து, நைஜீரியாவின் வடகிழக்கு போர்னோ மாநிலத்தில் உள்ள மான்குனோ பகுதியில் போகோஹரம் தீவிரவாதிகளுக்கும் நைஜீரிய ராணுவத்தினருக்கும் இடையே துப்பாக்கி தாக்குதல் நடைபெற்றது. இத்தாக்குதலின்போது 300-க்கும் மேற்பட்ட போகோஹரம் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.தீவிரவாதிகள் கைப்பற்றி வைத்திருந்த மான்குனோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை நைஜீரிய ராணுவம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதுதவிர ஏராளமான வெடிபொருட்கள், 8 வகையான தானியங்கி துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன.