கோ.திருஞானசெல்வம்முழு முதற்கடவுளான சிவபெருமான் வழிபாட்டிற்கு உரிய இரவுதான் சிவராத்திரி. சிவம் என்ற சொல்லுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவர் என்று பொருள். சிவராத்திரியன்று சிவவழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்களை நீக்கி இன்பம் பெறலாம் என்பது ஐதீகம். ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் மாசிமாத தேய்பிறைக்காலத்தில் வரும் சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரி விரத தினமாக முன்னோர்களால் கடைபிடிக்கப்படுகிறது. மகாசிவராத்திரி பற்றி புராணங்கள் கூறுவது என்ன?ஒவ்வொரு யுக முடிவிலும் மகாபிரளயம் ஏற்பட்டு பூலோகம் முழுவதும் நீரால் சூழப்பட்டு உயிரினங்கள் அனைத்தும் அழியும். அப்படி ஒரு பிரளய காலத்தின் முடிவில் உயிரினங்கள் அனைத்தும் அழிந்தன. பிரபஞ்ச நாயகனான சிவபெருமானும், நாயகியான பார்வதி தேவியும் மட்டும் எஞ்சினர். மும்மூர்த்திகளும் தங்கள் சக்தியை இழந்திருந்தனர்.
அப்போது பார்வதி தேவியானவர் பெருவெள்ளம் ஓய்ந்து மீண்டும் உயிரினங்கள் தோன்றவும், மனிதகுலம் தழைக்கவும் ஒரு இரவு முழுவதும் விழித்திருந்து நான்கு கால பூஜை செய்து பரம்பொருளை வழிபட்டார். அதனால் மீண்டும் பூமியில் உயிரினங்கள் தோன்றின. அப்படி பார்வதிதேவி பரமனைப் பூஜித்த தினமே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அவர் பூஜை செய்த நான்கு காலங்களும் மகாசிவராத்திரி சிறப்பு பூஜையாக செய்யப்படுகிறது. மற்றொரு புராணத்தில் ஒரு முறை படைக்கும் கடவுளான பிரம்மனுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி உண்டாயிற்று. இந்த பிரச்னை சிவபெருமான் கவனத்திற்கு சென்றது. உடனே சிவபெருமான் இருவர் முன்பும் ஜோதி பிழம்பாக ஒளி வடிவமாக தோன்றி அதன் அடியையோ முடியையோ கண்டு வருபவரே பெரியவர் என்றார். பிரம்மா அன்னப் பறவையில் ஏறி முடியை காண முயன்றார்.
பல யுகங்கள் கடந்தும் முடியை காண முடியாமல் சிவபெருமானின் தலையில் இருந்து விழுந்து கொண்டிருந்த தாழம்பூவை தான் முடியை கண்டதாக பொய் சாட்சி சொல்ல வைத்தார். அதனால் கோபமடைந்த சிவன் தாழம்பூவை பூஜைக்கு உதவாது என ஒதுக்கினார். அடியைத் தேடிச் சென்ற விஷ்ணு காண முடியாமல் திரும்பி வந்து உண்மையை ஒப்புக்கொண்டார். அப்படி அடி முடி காண முடியாமல் சிவபெருமான் ஜோதி வடிவமாக தோன்றிய நாளே சிவராத்திரி தினம் என கூறப்பட்டுள்ளது. வரும் 17ம்தேதி (செவ்வாய்கிழமை) மகா சிவராத்திரி புண்ணிய தினமாகும். அன்று நாள் முழுவதும் நாம் சிவபெருமானுக்கு அருகில் இருக்க வேண்டும். இறை சிந்தனையிலேயே மனம் இருக்க வேண்டும். அன்று காலையில் எழுந்து நித்யகடன்களை முடித்து விட்டு சிவாலயம் சென்று வழிபடவேண்டும்.
நிறைய உணவு உட்கொண்டால் மனம் சிவ சிந்தனையில் மூழ்காது. எனவே அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து, திருமுறைகளை பாராயணம் செய்தல் வேண்டும். அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவே சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. மனதை சிவனின் மீது வைத்து சிவாயநம என ஐந்தெழுத்து மந்திரத்தை கூறி இரவு முழுவதும் தூங்காமல் கண் விழித்து 4 ஜாம பூஜைகளிலும் பங்கேற்க வேண்டும். ஒரு நாள் வழிபாடு ஆயிரம் நாள் சிவபூஜை செய்த பலனை அளிக்கும் என்பது அருளாளர்கள் வாக்கு. பாரதத்தில் நான்கு சிவஸ்தலங்கள் மகா சிவராத்திரி தலங்களாகப் போற்றப்படுகின்றன. திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், காளஹஸ்தி, திருவைக்காவூர் ஆகும். இதில் திருவைக்காவூர் தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது.
இங்கு சர்வஜனரட்சகி சமேத வில்வனேஸ்வரராக சிவபெருமான் அருள்பாலித்து வருகின்றார். பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம், திருவானைக்காவல், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம் ஆகிய ஐந்து தலங்களிலும் சிவராத்திரி வழிபாடு சிறப்பாக நடக்கும். பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாக விளங்குகின்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் சிவபெருமான் ஆனந்த தாண்டவக் திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். மகா சிவராத்திரியன்று கோயில் நாள் முழவதும் திறந்திருக்கும். அன்று நடராஜருக்கு தினமும் நடக்கும் ஆறுகால பூஜைகளுடன் இரவில் 4 கால சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. ஒவ்வொரு கால பூஜைக்கு முன்னால் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
இதனை தொடர்ந்து வேதபாராயணங்கள், திருமுறை பாராயணங்கள் பாடப்படும். காலை முதல் ருத்ரயாகம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடத்தப்படுகின்றன. சிவராத்திரியன்று காலை 6 மணிக்கு திறக்கப்படும் இக்கோயில் மறுநாள் மதியம் உச்சிக்காலம் வரை திறந்திருக்கும். மாலையில் பாட்டும், பரதமும் கோயிலில் களைகட்டும். சிவராத்திரியன்றுதான் புகழ் பெற்ற நாட்டியாஞ்சலி விழா துவங்குகிறது. விடிய விடிய ஆடல் கலைஞர்கள் நாட்டியமாடி தங்களது நாட்டிய கலையை இறைவனுக்கு சமர்ப்பிக்கின்றனர். இரவில் கோயில் இரண்டாவது வெளி பிரகாரத்தில் விவேகானந்தர் பேரவை சார்பில் லட்சதீபம் ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் தீபங்களை ஏற்றுவார்கள்.
லட்ச தீபங்களின் ஒளியில் நடராஜர் கோயில் வளாகம் ஜொலிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இரவு முழுவதும் நடக்கும் 4 கால பூ¬ஐயின் போது ஒவ்வொரு கால பூஜை முடிந்தவுடன் பக்தர்கள் 4 வீதிகளிலும் கிரிவலம் வருவார்கள். சிவதரிசனத்திற்கு லிங்கோத்பவ காலம் மிக மிக உகந்தது. மகா சிவராத்திரியன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை உள்ள நேரமே லிங்கோத்பவ காலமாக கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நேரத்தில் தான் சிவன் ஜோதிலிங்கமாக தோன்றிய நேரமாக கருதப்படுகிறது.
இரவு முழுவதும் கண் விழிக்க முடியாதவர்கள் கூட இந்த லிங்கோத்பவ காலம் வரையிலாவது விழித்திருந்து வழிபாடு செய்தால் நல்லது. நடராஜர் கோயில் தீட்சிதர்களில் ஒருவரான வெங்கடேச தீட்சிதர் கூறுகையில், மகாசிவராத்திரியன்று கண் விழித்து நான்கு கால பூஜைகளையும் காண்பது சிறப்பு. அதில் 3வது காலமான லிங்கோத்பவர் காலத்தில் வழிபடுவது மிகவும் சிறப்பு. மகாசிவராத்திரியன்று முறையாக விரதம் இருந்து, இரவு முழுதும் கண்விழித்து இறைவனின் நாமத்தை சொல்லி வழிபடுவதால் அளவற்ற நன்மை கிடைக்கும். சிவராத்திரி வழிபாட்டினால் நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நல்ல மக்கட்பேறு பெறலாம். தீரா நோய்கள் நீங்கும். முடிவாக இனிப் பிறவா தன்மை பெறலாம் என முன்னோர்கள் கூறுகின்றனர் என்றார்.சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடங்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என்பதில் ஐயமில்லை.