குரோஸ்சிடோ: இத்தாலியில் கடந்த 2012-ம் ஆண்டு கோஸ்டா கன்கார்டியா என்ற பயணிகள் கப்பல் நடுக்கடலில் உடைந்து மூழ்கியது. இந்த விபத்தில் 32 பயணிகள் பலியானார்கள். நடுக்கடலில் 4,200 பயணிகளை தவிக்க விட்டு உயிர் தப்பிய கப்பலின் கேப்டன் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் கப்பல் கேப்டனுக்கு இத்தாலி நீதிமன்றம் நேற்று 16 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.இத்தாலியில் கடந்த 2012-ம் ஆண்டு கோஸ்டா கன்கார்டியா என்ற பயணிகள் கப்பலில் 4,300 பயணிகளுடன் கிளம்பியது. இந்த கப்பலை பிரான்சிஸ்கோ ஸ்கிட்டினோ என்பவர் கேப்டனாக இருந்தார். நடுக்கடலில் அந்த கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இவரது நடவடிக்கைளை பிடிக்காமல் பயணிகள் சண்டை போட்டனர்.
கப்பலில் பணியாற்றிய மற்ற ஊழியர்களும் இவரை கடுமையாக விமர்சித்தனர். இதனால் பிரான்சிஸ்கோ கடும் மன உளைச்சல் அடைந்தார். 2012-ம் ஆண்டு, ஜனவரி 13-ம் தேதி இரவு பயணிகள் அனைவரும் இரவு உணவு சாப்பிட்டு கொண்டிருந்தனர்.அப்போது துஸ்கன் தீவு அருகே கோஸ்டா கன்கார்டியா கப்பலை பிரான்சிஸ்கோ பாறையில் மோத செய்தார். இதனால் கப்பல் உடைந்து, கடல்நீர் கப்பலுக்குள் வேகமாக பாய்ந்தது. இதில் 32 பயணிகள் பரிதாபமாக பலியானார்கள். மேலும், 4,200-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்தனர். அவர்களை தவிக்க விட்டு, கப்பல் கேப்டன் பிரான்சிஸ்கோ கடலில் குதித்து உயிர் தப்பினார்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் இத்தாலி கடற்படையினர் விரைந்து சென்று, நடுக்கடலில் தவித்த பயணிகளையும் கப்பல் ஊழியர்களையும் மீட்டனர்.
இதுதொடர்பாக கப்பல் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கிட்டினோ மீது வழக்குப் பதிவு செய்து, 3 நீதிபதிகளை கொண்ட இத்தாலி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. நடுக்கடலில் பயணிகளை தவிக்க விட்டு உயிர் தப்பிய கப்பல் கேப்டனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும். அத்துடன், கப்பல் விபத்தில் பலியானவர்களுக்கு உரிய நஷ்டஈடு தரவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் நீதிபதியிடம் கோரப்பட்டது.நீதிபதிகளின் குறுக்கு விசாரணைகளின்போது கப்பல் கேப்டன் பிரான்சிஸ்கோ தகுந்த பதில் கூறாமல் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்து, பணியில் கவனக்குறைவாக இருந்து விபத்தை ஏற்படுத்திய கப்பல் கேப்டன் பிரான்சிஸ்கோ ஸ்கிட்டினோவுக்கு 16 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாக நேற்று இத்தாலிய நீதிமன்ற நீதிபதி ஜியோவானி புலியாட்டி தீர்ப்பு கூறினார்.