டெல்லியில் மீண்டும் பயங்கரம் : ஓடும் பஸ்சில் பெண் பலாத்காரம்
நொய்டா: டெல்லியில் மீண்டும் ஒரு பெண் ஓடும் பஸ்சில் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருமணமான பெண் ஒருவர் டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம் செல்லும் பஸ்சில் நேற்று இரவு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் வேறு பயணிகள் இல்லை. தனியாக இருந்த பெண்ணை பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் பலாத்காரம் செய்தனர். பின்னர் டெல்லிக்கு வெளியே உள்ள தாத்ரி அருகே கன்னோஜ் என்ற இடத்தில் நடுவழியில் இறக்கிவிட்டுள்ளனர். அந்த பெண் அளித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை மீட்டனர்.
அந்த பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து பஸ் டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதன்பிறகும் தொடர்ந்து டெல்லியில் பலாத்கார சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்துள்ளன. டெல்லி சட்ட மன்ற தேர்தல் பிரசாரத்தில் பெண்களின் பாதுகாப்பு முக்கிய பிரச்னையாக விளங்கியது. இந்த சூழலில் டெல்லியில் ஓடும் பஸ்சில் மீண்டும் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.