பஸ், ரயில் கட்டணம் குறைக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைந்துள்ள அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலையை குறைந்தது 35 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் விலையை குறைந்தது 28 ரூபாய்க்கும் குறைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையை குறைத்துக் கொள்ள வழி பிறக்கும். ஏற்கனவே எரிபொருள் விலை ஏற்றத்தை காரணம் காட்டி தமிழக அரசு அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றியது. போக்குவரத்துக்கு தினசரி டீசல் செலவு தற்சமயம் 42 சதவீதத்தில் இருந்து 36 சதவீதமாக குறைந்துள்ளது. டீசல் விலை குறைந்துள்ள இச்சூழலில் தமிழக அரசு மக்கள் நலன் கருதி அரசு பேருந்து கட்டணத்தைக் குறைக்க வேண்டும்.
எரிபொருள் விலை குறைந்தாலும் அதன் பயனாக போக்குவரத்துக்கு ஏற்படும் நஷ்டத்தை மட்டுமே குறைக்க முடியும் என போக்குவரத்து துறை கூறுவது ஏற்புடையதல்ல. தமிழக அரசு போக்குவரத்து துறையில் நிர்வாகச் சீர்திருத்தத்தை மேற்கொண்டு, நஷ்டத்தில் இயங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எரிபொருள் விலைக் குறைந்துள்ள இச்சூழலில் மத்திய அரசும் ரயில் பயணிகள் கட்டணத்தையும், சரக்கு ரயில் கட்டணத்தையும் குறைக்க வேண்டும்.