காஞ்சிபுரத்தில் புதர் மண்டிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பால் மக்கள் கடும் அவதி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே 1967ம் ஆண்டு 40 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் 3 அடுக்கு மாடிகள் கொண்ட 400 வீடுகளை கட்டியது. அரசு ஊழியர்களுக்கு இந்த வீடுகளை குறைந்த வாடகைக்கு வழங்கியது. கடந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு இந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி செவிலிமேடு பேரூராட்சியின் கீழ் இருந்தது. இதனால் பராமரிப்பு பணிகளை இந்த பேரூராட்சியே செய்து வந்தது.கடந்த உள்ளாட்சி தேர்தலில் இந்த பகுதி காஞ்சிபுரம் நகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் செவிலிமேடு பேரூராட்சியில் பணியாற்றி வந்த பல்வேறு ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் வேறு பணிக்கு மாற்றப்பட்டனர். இதனால் இந்த குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை செய்ய ஊழியர்கள் இல்லை.
தற்போது கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சீர்செய்யாததால் கழிவுநீர் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் அதிகளவில் நடமாடுவதால் மக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர்.இதுகுறித்து செவிலிமேட்டை சேர்ந்த முன்னாள் கவுல்சிலர் பத்மநாபன் கூறும்போது, ‘அடிப்படை வசதிகளை சீர்செய்து தரவேண்டும் என தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தை மக்கள் தொடர்பு கொண்டால், நகராட்சி தான் செய்யவேண்டும்‘ என்கின்றனர்.
நகராட்சியிடம் முறையிட்டால் ‘தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆவணங்கள் நகராட்சி நிர்வாகத்திடம் செவிலிமேடு பேரூராட்சி ஒப்படைக்கவில்லை. அந்த ஆவணங்களை பெற்ற பிறகு முறையான துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்படும்‘ என்கின்றனர். 2 ஆண்டுகளாக ஆவணங்களை கூட பெற முடியாமல் என்ன செய்தீர்கள் என்ற கேள்விக்கு எந்த பதிலும் இல்லை‘ என்றார். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு அடிப்படை பணிகளை மேற்கொள்ள தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.