தாக்குதல் நடத்துவோம் கேமரூன், நைஜர் அதிபர்களுக்கு போகோஹரம் தலைவர் எச்சரிக்கை
அபுஜா; நைஜீரியாவில் பாகா நகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போகோஹரம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் பொதுமக்களில் சுமார் 2 ஆயிரம் பேர் பலியானார்கள். இதேபோன்று கேமரூன் மற்றும் நைஜர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு தாக்குதல்களை நடத்துவோம் என்று போகோஹரம் தீவிரவாத தலைவர் அபுபக்கர் செகாவு நேற்று எச்சரித்து உள்ளார்.நைஜீரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பாகா நகரில் போகோஹரம் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினார்கள். இத்தாக்குதலில் ஏராளமான கட்டிடங்களும் வீடுகளும் இடிந்து விழுந்தன. அங்கு இருந்த பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி தாக்குதலில் 2 ஆயிரம் பேர் பலியானார்கள்.
நைஜீரியாவை தொடர்ந்து அருகில் உள்ள கேமரூன் நாட்டு எல்லையிலும் போகோஹரம் தீவிரவாதிகள் ஊடுருவி வருகின்றனர். அவர்கள் மீது கேமரூன் ராணுவத்தினர் எதிர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு எதிராக கேமரூன் ராணுவத்தினரின் தாக்குதல் தொடர்ந்தால், பாகா நகரில் நடைபெற்றதைப் போல் தாக்குதல் நடத்துவோம். எங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. இதை கேமரூன் மற்றும் நைஜர் நாட்டு அதிபர்களுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்கிறோம் என்று போகோஹரம் தீவிரவாத தலைவர் அபுபக்கர் செகாவு நேற்று வீடியோ மூலம் செய்தி வெளியிட்டார்.