கொழும்பு: இலங்கை ராணுவத்தில் மரணப்படையை இயக்கி பத்திரிகை ஆசிரியர் உள்பட 5 பேரை கொன்றதாக கோத்தபய ராஜபக்சே மீது திடுக்கிடும் புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரணை நடப்பதாக போலீஸ் செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹன கூறினார். இலங்கை அதிபர் தேர்தலில் 3வது முறையாக போட்டியிட்டு தோல்வியடைந்த மகிந்த ராஜபக்சே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தேர்தல் முடிவின் போது ராணுவபுரட்சி நடத்த திட்டமிட்டது, அவரது ஆட்சிக்காலத்தில் நடந்த பல்வேறு ஊழல்கள் குறித்து விசாரணை துவங்கி உள்ளது. ராஜபக்சே தம்பிகள் கோத்தபய, பசில் மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் விசாரணை நடைபெறுமென இலங்கை அரசு அறிவித்து உள்ளது.
இதனிடையே கோத்தபய இயக்கிய மரணப்படை கொலைகள் குறித்து விசாரணை துவங்கி உள்ளதாக அந்நாட்டின் போலீஸ் செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹன கூறினார். ராஜபக்சே ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பல்வேறு ஊழல்கள், மோசடி குறித்து விசாரணை நடந்து வருகிறது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய ராஜபக்சே ராணுவத்தில் மரணப்படையை இயக்கி வந்ததாகவும், அந்த படை மூலம் சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்யுமாறு அவரே உத்தரவிட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு மீதும் விசாரணை துவங்கி உள்ளது.
இந்த படை மூலம் 5 பேரை கொன்றதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஆள் கடத்தல்கள், தாக்குதல்கள், படுகொலைகள் நடத்தியதாகவும் கோத்தபய மீது அடுக்கடுக்காக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது, என்றார் அவர்.நிதி மோசடியை மறுக்கும் கோத்தபய: இலங்கை தப்ரபேன் வங்கி கிளையில் 750 கோடிபணம் கோத்தபயவின் பெயரில் இருந்ததாகவும், அந்த பணம் தற்போது திறைச்சேரிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியிருந்தார். இதனை கோத்தபய ராஜபக்சே மறுத்துள்ளார்.