உடன்குடி: மணப்பாட்டில் தேசிய கடல் நீர் சறுக்கு விளையாட்டு போட்டி துவங்கியது. இதில் 18 மாநிலங்களை சேர்ந்த 147 வீரர்கள் பங்கேற்றனர்.தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாட்டில் கடல் ஒருபுறம் ஆர்ப்பரிப்புடனும், மறுபுறம் அமைதியாகவும் காட்சியளிக்கும். அமைதியாக இருக்கும் கடல் பகுதியில் காலச்சூழ்நிலையை கண்டறிந்து வெளிமாநில, வெளிநாட்டு விளையாட்டு வீரர்கள் கடல்நீர் சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவர்.கோவா பகுதி கடலில் கூட இதுவரை இரு வகை கடல்சறுக்கு விளையாட்டு போட்டிகளே நடத்தப்பட்டுள்ளன. ஆனால் ‘குட்டி கோவா‘ என்று அழைக்கப்படும் மணப்பாட்டில் நின்று கொண்டு துடுப்பு போடுதல், அலைச்சறுக்கல், பாய்மரக் கப்பல், படகு, காற்று அலைச்சறுக்கல் ஆகிய ஐந்து வகையான தேசிய கடல்நீர்ச் சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கியது.
போட்டியை தமிழ்நாடு சுற்றுலாத்துறை ஆணையாளர் ஹர்சகாய் மீனா துவக்கி வைத்து பேசுகையில், ‘கிழக்கு கடற்கரை சாலையையொட்டி அமைந்துள்ள மணப்பாடு இயற்கையாகவே அழகான கட்டிட கலை, அழகிய கடற்கரையை கொண்டதாக உள்ளது. தொடர்ந்து கடல்சறுக்கு போட்டிகள் நடத்த இங்குள்ள கிராம மக்கள் ஓத்துழைப்பு கொடுத்தால் வரும் ஆண்டில் தமிழக சுற்றுலாத்துறை சார்பில் உலக அளவில் கடல்சார் விளையாட்டு போட்டி நடத்தப்படும்‘ என்றார்.தமிழ்நாடு சுற்றுலாத்துறையும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, கோவா உள்பட 18 மாநிலங்களைச் சேர்ந்த 147 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். வரும் 11ம் தேதி வரை இப்போட்டிகள் நடக்கிறது.நேற்று காலை முதல் பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இன்று 2வது நாளாக போட்டி நடக்கிறது. நாளை (11ம் தேதி) இறுதிப்போட்டிகளும், மாலையில் பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.