மொபட்டில் வைத்திருந்த ரூ .1 லட்சம் அபேஸ்
தாம்பரம்: குரோம்பேட்டை சங்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா (45), லாரி உரிமையாளர். இவர் நேற்று தனது நண்பரிடம் சென்று ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை கடனாக வங்கிக் கொண்டு மொபட்டின் உள்பகுதியில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். திடீரென அவருக்கு வயிறு கோளாறு ஏற்பட்டதால் மொபட்டை வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி வைத்து விட்டு பணத்தை எடுத்து செல்லாமல் அவசர அவசரமாக வீட்டுக்குள் ஓடினார். இதனை நோட்டமிட்டு வந்த மர்ம ஆசாமிகள் பணத்தை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர். திரும்பி வந்து பார்த்த போது பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக குரோம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.