திருவொற்றியூர்: மாதவரம் தணிகாசலம் நகரில் ராட்சத கழிவுநீர் கால்வாய் உள்ளது. இப்பகுதியின் அருகே உள்ள பி பிளாக் தெருவில் பொதுமக்களின் நடமாட்டம் எப்போதும் இருக்கும். நேற்று காலை 10 மணி அளவில் அந்த வழியாக சென்ற சிலர், கால்வாயை ஒட்டிய பகுதியில் சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடப்பதை பார்த்தனர். உடனே அவர்கள் மாதவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உதவி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். சூட்கேசை திறந்து பார்த்த போது, அதில் ஒரு ஆணின் உடல் திணிக்கப்பட்டு இருந்தது.
கொலையான நபருக்கு 50 வயது இருக்கும். வெள்ளை பனியனும், ஷார்ட்சும் அணிந்திருந்தார். கழுத்தில் ஒரு வெள்ளி செயினும், கையில் தங்க மோதிரமும் கிடந்தது. தலையின் பின் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தன. விலா எழும்பும் முறிந்துள்ளது. அவர் கட்டியிருந்த கைக் கடிகாரத்தில் சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு எழுத்து குறிப்பிடப்பட்டிருந்தது. உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கொலை செய்யப்பட்டவர் சென்னை துறைமுக ஊழியராக இருக்கலாம். அந்த நபர் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது, கூலிப்படை மூலம் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கொலையான நபரின் நகைகள் திருடு போகாமல் இருந்துள்ளது. பணத்துக்கு ஆசைப்பட்டு இருந்தால் கொலையான நபரின் உடலில் நகையை விட்டுச் செல்ல மாட்டார்கள். அவரின் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காகவே, மோதிரம், வாட்ச் போன்றவற்றை விட்டுச் சென்றிருப்பதாக போலீசார் கருதுகின்றனர்.
சென்னை துறைமுகத்துக்கு சென்று, இறந்தவரின் புகைப்படத்தை காண்பித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்தில் காணாமல் போன நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதிலும் உருப்படியான தகவல் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் குற்றவாளிகளை அடை யாளம் காணமுடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.