நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் : எஸ்டிபிஐ வலியுறுத்தல்
சென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்ட அறிக்கை:ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாத நிலையில் தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய அரசு, தேனி மாவட்டம் போடி மலைப் பகுதியில் அமைந்துள்ள பொட்டிபுரம் கிராமத்தில் இயற்கை பேரழிவு திட்டமான நியூட்ரினோ ஆய்வு மையம் ஏற்படுத்த முடிவு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. தமிழக மக்களின் எதிர்ப்பை மீறி கடந்த ஜனவரி 5ம் தேதி மத்திய அமைச்சரவை இத்திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. ரூ.1500 கோடி மதிப்பீட்டில் இப்போது அமைக்க இருக்கும் இத்திட்டத்துக்கான கருத்துருவை 2010ல் அன்றைய காங்கிரஸ் அரசு வெளியிட்ட போதே கண்டித்து அறிக்கை வெளியிட்டதோடு, தேனி நகரில் விவசாயிகளையும் பொதுமக்களையும் திரட்டி கண்டன ஆர்பாட்டத்தையும் நடத்தினோம். நியூட்ரினோ ஆய்வுக்காக மலையில் சுரங்கம் தோண்டும் போதும், அதற்காக மலையை தகர்க்கும் போதும் அப்பகுதி முழுவதும் பூமி அதிர்ச்சி எற்படுவதை போன்று குலுங்கி பேரதிர்வு ஏற்படுவதுடன், சுற்றியிருக்கும் விவசாய நிலங்கள் பாழ்பட்டு பெரும் இயற்கை அழிவுகளை சந்திக்க நேரிடும். எனவே, மக்களை அச்சுறுத்தும், இயற்கையையும் விவசாயத்தையும் பேரழிவுக்கு உள்ளாக்கும், நியூட்ரினோ ஆய்வு மையத்தை தேனியில் அமைக்கும் திட்டத்தை உடனே மத்திய அரசு கைவிட வேண்டும்.