சென்னை: திமுக பொதுக்குழு கருணாநிதி தலைமையில் இன்று சென்னையில் கூடியது. இதில், திமுக தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக க.அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டா லின் ஆகியோர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர்.தமிழகத்தில் 65 மாவட்டங்களாக திமுக பிரிக்கப்பட்ட பிறகு அக்கட்சியின் 14வது தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வந்தது. இதில் புதிய மாவட்ட செயலாளர் மற்றும் ஒன்றிய, பகுதி, வட்ட செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து திமுக பொதுக்குழு சென்னையில் இன்று கூடுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை சரியாக 9.40 மணிக்கு திமுக பொதுக்குழு கூடியது.
பொதுக்குழுவுக்கு கருணாநிதி தலைமை வகித்தார். க.அன்பழகன் முன்னிலை வகித்தார். மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், ஒன்றிய, பகுதி செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, பொதுக்குழுவுக்கு வருகை தந்த கருணாநிதியை அங்கு கூடியிருந்த தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.பொதுக்குழு கூடியவுடன் முதற்கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் திமுக தலைவராக கருணாநிதி, பொதுச் செயலாளராக க.அன்பழகன், பொருளாளராக மு.க.ஸ்டாலின் ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையர் சற்குணபாண்டியன் அறிவித்தார். 11-வது முறையாக தலைவராக கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து திமுக முதன்மை பொது செயலாளராக முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், துணை பொதுச்செயலாளர்களாக சற்குணபாண்டியன், ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தார். தொடர்ந்து திமுக தொழிலாளர் அணி செயலாளராக ரத்தினசபாபதியும், மாணவர் அணிச் செயலாளராக இள.புகழேந்தி, மகளிர் அணிச் செயலாளராக கனிமொழி எம்பி, கொள்கை விளக்க அணி செயலாளர்களாக திருச்சி சிவா, ஆ.ராசா, ஆகியோர்களது பெயர்கள் அறிவிக்கப்பட்டன.மேலும் தணிக்கை குழு உறுப்பினர்களாக சுப.சீத்தாராமன், ஆ.பலராமன், காசிநாதன், குழந்தை வேலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து பொதுக்குழு தீர்மானங்களை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் படித் தார்.