கொழும்பு: இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்களின் எதிர்ப்பு காரணமாக அதிபர் ராஜபக்சே தோல்வியை தழுவுகிறார். எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனா சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார். எனவே இலங்கையின் அடுத்த அதிபராக மைத்ரிபால சிறிசேனா தேர்வாகிறார்.இலங்கையில் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுவது வழக்கம். ஆனால் 2 முறை அதிபராக பதவி வகித்து வரும் 69 வயதான மகிந்த ராஜபக்சே தனது பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தலை நடத்த முடிவு செய்தார். 3வது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிட முடிவு செய்து அதற்காக இலங்கை அரசியல் அமைப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தார். இதனையடுத்து இலங்கையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் ராஜபக்சே அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த மைத்ரிபால சிறிசேனா ராஜபக்சேவுடன் இருந்த கருத்து வேறுபாடு காரணமாக பதவி விலகினார். இதனையடுத்து கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் மைத்ரிபால சிறிசேனா வெளியேற்றப்பட்டார். இவையெல்லாம் சிங்கள கட்சிகள் இடையே ராஜபக்சேவுக்கு எதிராக அணிசேர வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தன. இம்முறை ராஜபக்சேவை எப்படியாவது தோற்கடித்து விட வேண்டும் என சிங்கள கட்சிகளும் வியூகம் வகுத்தன. முன்னாள் அதிபர் சந்திரிகா குமார துங்கா, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உள்ளிட்ட பல சிங்கள கட்சிகளும் ராஜபக்சேவை எதிர்க்க முடிவு செய்தன. ஒருங்கிணைந்த கூட்டமைப்பு அமைத்து பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்தனர்.
இதனையடுத்து மூத்த அரசியல்வாதியான, அனுபவம் வாய்ந்த மைத்ரிபால சிறிசேனாவுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டது. மேலும் ராஜபக்சே அவையில் இருந்து அதிருப்தி அமைச்சர்கள் 6 பேரும் மைத்ரிபால சிறிசேனாவை தொடர்ந்து அடுத்தடுத்து எதிரணியில் இணைந்தனர். இது ராஜபக்சேவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.ஆனால் இது எதையும் உணர்ந்து கொள்ளாத ராஜபக்சே இம்முறை எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார்.தேர்தல் அறிவிக்கப்பட்டு பிரசாரம் நடைபெற்ற போது வரலாறு காணாத வகையில் வன்முறை சம்பவங்கள் நிறைவேறின. சுமார் 1000க்கும் அதிகமான தேர்தல் மோதல் வழக்குகள் பதிவாகின. தேர்தல் நேரத்தில் இந்த சம்பவங்களை பயன்படுத்தி ராணுவத்தை வைத்து ஏதாவது முறைகேடுகளை செய்து வெற்றியை சாதித்துவிட ராஜபக்சே சதி செய்துள்ளதாக எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தன. தேர்தல் முறையாக நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன.
விடுதலை புலிகளுடனான போருக்கு பின் வட பகுதிகளில் ராணுவத்தினரின் நடவடிக்கைகள் தொடர்வதால் வாக்குபதிவு சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடக்க சர்வதேச நாடுகள் கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழும்பின. இதனையடுத்து இலங்கை அதிபர் தேர்தலில் சார்க் உள்ளிட்ட 70 நாடுகளை சேர்ந்த 2500க்கும் அதிகமான பார்வையாளர்கள் குவிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இதற்கு ஒத்துழைக்க மறுத்த ராஜபக்சே சர்வதேச நாடுகளின் வலியுறுத்தலுக்கு பிறகு இணங்கி போக வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆசிய நாடுகளின் தேர்தல் பார்வையாளர்கள் குழு தலைவராக இந்தியாவின் தேர்தல் முன்னாள் தலைமை ஆணையர் குரேஷி செயல்பட்டார்.இலங்கையில் அதிபர் தேர்தலில் 1 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 490 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.
நாடு முழுவதும் 12,021 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணிக்காக சுமார் 71 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கையில் 70 சதவீதம் பேர் சிங்களர்கள், 11 சதவீதம் பேர் தமிழர்கள், முஸ்லீம்கள் 9 சதவீதம் பேர் உள்ளனர்.நேற்று காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. அமைதியான முறையில் வாக்குபதிவு விறுவிறுப்பாக காணப்பட்டது. குறிப்பாக தமிழர்கள் பகுதியில் 75 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழகர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான யாழ்பாணத்தில் 60 சதவீதமும், முல்லைத் தீவில் 74.78, கிளிநொச்சியில் 63, மன்னாரில் 68.52, மட்டகளப்பில் 60.3, கண்டியில் 75, கொழும்பு, அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் 76, திரிகோணமலையில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின.ராஜபக்சேவின் சொந்த ஊரான ஹம்மன் தோட்டாவில் 79 சதவீத வாக்குகள் பதிவாகின.
நேற்று தனது மனைவி சிராந்தியுடன் வந்து ஹம்மன் தோட்டாவில் வாக்களித்த பின் ராஜபக்சே அளித்த பேட்டியில், இம்முறை நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. எனவே இன்று முதலே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தொடங்கி விடுவோம் என்றார்.வாக்குகள் எண்ணும் பணி 1115 இடங்களில் நடைபெற்றது. இதில் 304 மையங்களில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.ஆனால் நேற்று இரவு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக தொடங்கின. ஆரம்பத்தில் வெற்றி காற்று ராஜபக்சேவை நோக்கி வீசுவது போல காணப்பட்டாலும், அடுத்தடுத்த ஒரு மணி நேர நிலவரங்கள் ராஜபக்சேவுக்கு சாதகமாக இல்லை என்பதை காட்டத் தொடங்கின.
காலை நிலவரப்படி எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்ரிபால சிறிசேனாக்கு ஆதரவாக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் முன்னிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் வெற்றி பெறுவது உறுயாகியுள்ளது. இதுகுறித்து அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் ராஜபக்சே தோல்வியை ஒப்புக்கொள்வதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் இலங்கை தமிழர்களை கொன்று குவித்த கொடுங்கோலன் ராஜபக்சேவின் தோல்வி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு விட்டது.