பொள்ளாச்சி: ஆனைமலையருகே ஆடு, மாடுகளை வேட்டையாடிய சிறுத்தை, வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் நேற்று இரவு சிக்கியது. இன்று காலை அடர்வனத்தில் அந்த சிறுத்தை விடப்பட்டது.கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பெருமாள்கரடு பகுதியில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று அட்டகாசம் செய்து வந்தது. வீடு, தோட்டங்களில் புகுந்து ஆடு, மாடு, கோழிகளை வேட்டையாடியது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்தனர்.சிறுத்தையை பிடிக்க வனத்துறை சார்பில் ஒரு தோட்டத்தில் கூண்டு வைக்கப்பட்டது. அதில் கோழிகள் கட்டி வைக்கப்பட்டன. நேற்று இரவு அந்த கூண்டில் சிறுத்தை சிக்கிக்கொண்டது.
இன்று காலை வனத்துறையினர் மற்றும் வன கால்கடை டாக்டர் மனோகரன் தலைமையிலான குழுவினர் அங்கு சென்றனர். கூண்டுக்குள் ஆக்ரோஷத்துடன் உறுமிக்கொண்டிருந்த சிறுத்தைக்கு துப்பாக்கி மூலம் ஊசி செலுத்தியதும் மயங்கியது. பின்னர் வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டு, வாகனத்தில் ஆனைமலை அடர் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.சிறிது நேரத்திலேயே சிறுத்தைக்கு மயக்கம் தெளிந்தது. அடர்வனத்துக்கு சென்றதும் கூண்டு திறக்கப்பட்டது. சிறுத்தை பாய்ந்து வனத்துக்குள் ஓடி மறைந்தது. இது 5 வயதுள்ள ஆண் சிறுத்தை என டாக்டர் மனோகரன் தெரிவித்தார்.