காபூல்: ஆப்கானிஸ்தானில் அல்கய்தா மற்றும் தலிபான்களின் செயல்பாடுகளை முறியடிக்க அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவம் கடந்த 2001-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. தற்போது அதன் பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேட்டோ படைகள் இன்று முதல் ஆப்கானில் இருந்து வெளியேறத் தொடங்கியுள்ளனர்.ஆப்கானிஸ்தானின் பல்வேறு பிராந்தியங்களில் பல ஆண்டுகளாக தலிபான் தீவிரவாதிகள் தனியே ஆண்டு வந்தனர். கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, அல்கய்தா மற்றும் தலிபான்களை அழிக்கும் பணியில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை ஆப்கானிஸ்தானில் களமிறங்கியது.
இதைத் தொடர்ந்து, அல்கய்தா தீவிரவாத இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் சுட்டு கொல்லப்பட்டார். கடந்த 13 ஆண்டுகளாக தலிபான் மற்றும் நேட்டோ படையினருக்கு இடையே தாக்குதலில் இதுவரை 2,200 அமெரிக்க வீரர்கள் உட்பட 3,500 வெளிநாட்டு ராணுவ வீரர்கள் பலியாகி உள்ளனர்.ஆப்கானிஸ்தானில் 2014-ம் ஆண்டு தலிபான்கள் நடத்திய தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதலில் இதுவரை 3,200 ஆப்கானிஸ்தான் மக்கள் பலியாகி விட்டனர். ஆப்கான் ராணுவம் மற்றும் போலீஸை சேர்ந்த 4,600 பேர் தலிபான் தாக்குதலில் பலியாகி உள்ளனர்.
தற்போது ஆப்கான் ராணுவம் உள்நாட்டு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்கான் ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பயிற்சி அளித்து வந்தனர்.இந்நிலையில், ஆப்கானின் புதிய அதிபராக அஷ்ரப் கானி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, ஆப்கானில் செயல்பட்டு வந்த நேட்டோ படை இன்று முதல் வெளியேற துவங்கியுள்ளது.அமெரிக்காவின் 13 ஆயிரம் வீரர்கள் மட்டும் சர்வதேச பாதுகாப்பு உதவி படை (ஐஎஸ்ஏஎப்) என்ற பெயரில் ஆப்கான் வீரர்களுக்கு உதவியாக செயல்படுவார்கள் என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் ஜான் கேம்ப்பெல் நேற்றிரவு காபூலில் கூறினார்.