முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்று சுமார் 2 அடி நீளம், 1 அடி அகலம் கொண்ட ஆள் இல்லாத ரிமோட்டில் இயங்க கூடிய சிறிய ரக விமானம் பறந்து நகர பகுதியை வட்டமிட்டது. பின்னர் பேட்டை செம்படவன்காடு கிராமத்தில் உள்ள அங்க£ளம்மன் கோயில் அருகே உள்ள தென்னை மரத்தில் மோதி கீழே விழுந்தது. அப்பகுதியில் இருந்தவர்கள் விமானத்தை மீட்டு முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக முத்துப்பேட்டை டிஎஸ்பி கணபதியிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் விமானம் முத்துப்பேட்டையை சேர்ந்த சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமானது என்றும், அவர் தனது வீட்டு மாடியில் நின்று பறக்க விட்டபோது தவறான பாதையில் சென்று மரத்தில் மோதி கீழே விழுந்ததும் தெரிய வந்தது.
அந்த விமானம் நான்கு இறக்கைகளுடன் உள்ளது. அதிநவீன தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த விமானம். பறந்து கொண்டே படம் பிடிக்கும் வகையில் அதிநவீன கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன. எதற்காக விமானம் பறக்க விடப்பட்டது, இந்தியாவின் கடைசி எல்லையான இப்பகுதியை தவறான செயலுக்காக படம் பிடிக்க அனுப்பப்பட்டதா, விமானத்தை சிங்கப்பூரிலிருந்து கொண்டு வர முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.