மாஸ்கோ: ரஷ்ய எல்லையில் கருங்கடல் பிராந்தியத்தில் இருந்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு செல்லும் பைப் லைன் உடைந்து தாப்சி ஆற்றுக்குள் கச்சா எண்ணெய் கலந்துவருகிறது. இதனால் அப்பகுதியில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. தற்போது அந்த ஆற்றை சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.கருங்கடல் பிராந்தியத்தில் ரஷ்யாவின் எல்லையில் பெட்ரோலிய எண்ணெய் துரப்பண பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு கிடைக்கும் எண்ணெய் குழாய்கள் மூலம் தாப்சி ஆற்றின் வழியாக 9 கி.மீ. தொலைவில் தாப்சி நகரில் உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு கொண்டு வரப்படுகிறது. இப்பணிகளை ரஷ்யாவின் செர்னோமர் டிரான்ஸ்நெப்ட் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கருங்கடல் பிராந்தியத்தில் கடந்த செவ்வாய்கிழமை ஏற்பட்ட நில அதிர்வினால் தாப்சி ஆற்றில் செல்லும் எண்ணெய் குழாய் வெடித்து சிதறியது. சுமார் 800 கன மீட்டர் அளவு கச்சா எண்ணெய் தாப்சி ஆற்றில் 15 கி.மீ. தொலைவுக்கு பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் மாசுகளும் எண்ணெய் கழிவுகளும் சூழ்ந்தன.இதுகுறித்து தகவல் அறிந்ததும் டிரான்ஸ்நெப்ட் எண்ணெய் நிறுவனத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த புதன்கிழமை முதல் தாப்சி ஆற்றை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், அங்கு வானிலை மாறுபாடு காரணமாக சுத்தப்படுத்தும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, தாப்சி ஆற்றை சுற்றியுள்ள நகரப் பகுதிகளில் நேற்று முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.
அப்பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது. தாப்சி ஆற்றில் ஏற்கெனவே 700 டன் வரை எண்ணெய் கழிவுகள் கலந்துள்ளது. தற்போது எண்ணெய் குழாய் வெடித்து சிதறியதால் அதிகளவில் மாசு படர்ந்து உள்ளது. இப்பிரச்னையில் எண்ணெய் நிறுவனம் உடனடியாக செயல்பட வேண்டும் என்று உலக வனவிலங்குகள் நல நிதியம் ரஷ்யாவை கேட்டுக் கொண்டுள்ளது.