துரைபாக்கம்: திருவான்மியூரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம், பணிமனை அமைக்கப்பட்டது. ஆரம்பத்தில் 50 பஸ்கள் இங்கிருந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட்டன. தற்போது திருவான்மியூர் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளது.கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்ட பிறகு திருவான்மியூர் முக்கிய பகுதியாக திகழ்ந்து வருகிறது. திருவான்மியூரை சுற்றி நூற்றுக்கணக்கான பள்ளிகள், கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள், நவீன வணிக வளாகங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள் உள்ளன. தற்போது இந்த பணிமனையில் இருந்து 149 பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ் நிலையம் கட்டும் போது மழைநீர் தேங்காதவாறு வழிவகை செய்யப்பட்டது. பின்னர் பஸ் நிலையம், பணிமனை சுற்றியுள்ள சாலைகள் பலமுறை போடப்பட்டதால் சாலை உயரமாகவும் பஸ் நிலையம், பணிமனை தாழ்வாகவும் ஆகிவிட்டது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது.
மேலும் பஸ் நிலையத்துக்குள் பயணிகள் அமர சிமென்ட் சிலாப்புகள் போடப்பட்டிருந்தது. நாளடைவில் உடைந்து விட்டது. பல வருடங்களாகியும் சரி செய்யாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமப்படுகின்றனர். நாளொன்றுக்கு சராசரியாக 600 பஸ்கள் வந்து செல்கிறது. ஆனால் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறை சிதிலமடைந்து கிடப்பதால் பயணிகள் சாலையிலும், பஸ் நிலைய சுவரிலும் சிறுநீர் கழிக்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. திருவான்மியூர் பஸ் நிலையத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.