சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 22வது அகில இந்திய மாநாடு வரும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெறுகிறது. மாநாட்டை சிறப்பாக நடத்த 151 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் அகில இந்திய அளவிலான கட்சியின் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.அகில இந்திய அளவில் நடத்தப்படும் மாநாட்டிற்கு முன்பாக மாநில, மாவட்ட மாநாடுகள் நடத்த வேண்டும். இதன்படி கட்சியின் மாநில மாநாடு வரும் பிப்ரவரி மாதம் 25ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோயம்புத்தூரில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாநாடு ஆங்காங்கே நடந்து வருகிறது. அதுமட்டுமின்றி, வரும் 27ம் தேதி தேனியில் ஏஐடியூசியின் மாநாடு நடக்கிறது. இதற்கிடையே கட்சியின் மாநில, மாவட்ட மாநாடுகளையும், ஏஐடியூசியின் மாநாட்டையும் சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏஐடியூசி அலுவலகத்தில் நிர்வாக குழு கூட்டம் இன்று நடந்தது. இக்கூட்டத்தில் மாநில செயலாளர் தா.பாண்டியன், மாநில துணை செயலாளர் மகேந்திரன், மாநில, மாவட்ட நிர்வாகிகள் என கட்சியின் நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.