சரக்கு மற்றும் சேவை வரி விவகாரம் : பிரதமருக்கு பன்னீர் செல்வம் கடிதம்
சென்னை: சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மாநில அரசுகளின் ஒருமித்த கருத்தை பெற்ற பிறகே அது தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் வருகிற 22ம் தேதி தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வருவாய் பாதிக்கப்படும் என மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பில் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புக்கு உரிய இழப்பீடு வழங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலங்களின் கருத்து ஒற்றுமையை மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மாநில நிதி அமைச்சர்கள் குழு பெற வேண்டும். அதற்கு பின்னரே இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். மசோதாவை நிறைவேற்றிய பிறகு மாநிலங்களின் கருத்து வேறுபாடுகளை களைந்து கொள்ளலாம் என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
மேலும் இது மாநிலங்களின் சுயாட்சியை பாதிக்கும் நடவடிக்கையாகவும் அமையும். இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.மேலும் மாநில அரசுகளின் வருவாய் பாதிப்பு தொடர்பான அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்த பிறகே இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும். மாநில அரசுகளின் நிதி வருவாய் தன்னாட்சியை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.