சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:மேகதாது அணை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்து விட்டால், அணை கட்டும் பணிகளை கர்நாடகம் தொடங்கிவிடும். அதன்பின் அதை தடுப்பது குதிரை ஓடியதும் லாயத்தை பூட்டும் செயலாகவே இருக்கும். மேகதாது அணை குறித்து இனி ரகசியக் கூட்டங்களில் தான் விவாதிக்கப்படும் என்று கர்நாடக சட்டப்பேரவையில் கடந்த 15ஆம் தேதி அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் பாட்டீல் கூறியிருந்த நிலையில் கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
அரசியல் சட்டத்திற்கு எதிரான மத்திய அமைச்சர்களின் இத்தகைய செயல் பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது. இப்பிரச்சினை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது.புதிய அணை கட்டுவதில் கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழக அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. கர்நாடகத்தின் திட்டங்களை முறியடிக்க மத்திய அரசுக்கு அரசியல் அழுத்தம் தர வேண்டியது அவசியம் ஆகும். இதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், அதில் பங்கேற்கும் தலைவர்களுடன் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து காவிரி பிரச்சினை பற்றி வலியுறுத்தவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.