நாகர்கோவில்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, கொச்சியில் இருந்து மீன்பிடிக்க சென்ற மேலும் 102 குமரி மீனவர்களை இங்கிலாந்து கடற்படை கைது செய்துள்ளது.கேரள மாநிலம் கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த மாதம் 27ம் தேதி 7 விசைப்படகுகளில் 102 குமரி மாவட்ட மீனவர்களும், கேரள மீனவர்களும் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள், இந்திய பெருங்கடலில் பிரிட்டீஸ் - இந்திய கடல் எல்லை பகுதியில், கடந்த 11ம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள டியாகோ பிராக்சியா என்ற தீவில் மீனவர்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல், இன்று அதிகாலை மீனவர்களின் உறவினர்களுக்கு தெரியவந்தது.
ஏற்கனவே கடந்த 5ம் தேதி 14 மீனவர்களும், 15ம் தேதி 13 மீனவர்களும் இங்கிலாந்து கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் மேலும் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறை பிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கும், பிரதமருக்கும் குமரி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே வங்கதேசத்தில் குமரி மற்றும் கேரளாவை சேர்ந்த 26 மீனவர்கள் கடந்த 9ம் தேதி அந்நாட்டு கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் குமரியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களையிழந்து உள்ளது.