திருச்சி: டெல்டா மாவட்டங்களில் இன்று 2வது நாளாக மழை பெய்து வருகிறது. நாகையில் நேற்று மதியம் பலத்த மழை கொட்டியது. மாலையில் சற்று ஓய்ந்த நிலையில், இரவில் மீண்டும் பெய்யத் தொடங்கியது. வேதாரண்யம், பூம்புகார் உள்பட அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்தது. தஞ்சையில் சில தினங்களாக மழை விட்டு, விட்டு பெய்து வருகிறது. கும்பகோணம், பேராவூரணி, அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீடித்து வருகிறது. மழையால் தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் தண்ணீர் புகுந்தது. இதனால், கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் அவதிப்பட்டனர். திருவாரூரில் நேற்று விடிய விடிய பலத்த மழை கொட்டியது. மாவட்டத்தில் 3.66 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி நடைபெற்றது. தற்போது பயிர்கள் கதிர் வந்த நிலையில் உள்ளன. தொடர் மழை காரணமாக நெற்பயிர்களை புகையான் பூச்சிகள் தாக்கும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை, பெரம்பலூர், திருச்சியில் அவ்வப்போது பலத்த மழையும், சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் அவதிக்குள்ளாகினர்.தஞ்சை, திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கூறுகையில், ‘மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் கதிர் வரும் நிலையில் உள்ளன. இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் புகையான் பூச்சி தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் பயிர் காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு வழக்கத்துக்கு மாறாக 30 நாட்களுக்கு முன்னதாக நவம்பர் 30ம் தேதியுடன் முடித்துக் கொண்டதால் தற்போது பயிர்களை காப்பீடு செய்ய முடியாத நிலை உள்ளது. மேலும் இந்த மழை தொடர்ந்தால் அனைத்து பயிர்களும் புகையான் பூச்சிகள் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும். மகசூலில் பெரும் பாதிப்பு ஏற்படும். எனவே தமிழக அரசு பூச்சிக் கொல்லி மருந்துகளை முழு மானியத்தில் உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்‘ என்றனர்.