திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல காலம் நவம்பர் 17ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, 16ம் தேதி மாலை 5.30 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி நடை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்துவார். அன்று வேறு எந்த பூஜையும் நடைபெறாது. இரவு 7 மணியளவில் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களின் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி நடைபெறும். சபரிமலை கோயில் புதிய மேல்சாந்தியாக கிருஷ்ணதாஸ் நம்பூதிரியும், மாளிகைப்புரத்து அம்மன் கோயில் மேல்சாந்தியாக கேசவன் நம்பூதிரியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்கும் சடங்குகளை நடத்தி வைப்பார். கார்த்திகை 1ம் தேதியான நவம்பர் 17ம் தேதி முதல் புதிய மேல்சாந்திகளின் தலைமையின்கீழ் தான் சபரிமலை மற்றும் மாளிகைப்புரம் கோயில்களில் முக்கிய பூஜைகள் நடைபெறும். அன்று முதல் 41 நாட்கள் சபரிமலையில் மண்டல கால பூஜைகள் நடைபெறும். இதையொட்டி தினமும் அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சிகால பூஜை, புஷ்பாபிஷேகம் உட்பட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
தினமும் அதிகாலை முதல் நண்பகல் 12 மணிவரை நெய்யபிஷேகமும் நடைபெறும். மண்டல கால பூஜைகளை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள் என்பதால் குடிநீர், தங்குமிடம் உட்பட அனைத்து வசதிகளையும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செய்து வருகிறது. அரவணை பாயசம், அப்பம் உட்பட பிரசாதங்கள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடங்களை விட இவ்வருடம் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சபரிமலை கொயிலுக்கு அருகிலுள்ள சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.