இந்திய போர் கப்பல் மீது வெளிநாட்டு கப்பல் மோதல்: நடுக்கடலில் பரபரப்பு
விசாகப்பட்டினம்: இந்திய கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் மீது, வெளிநாட்டில் இருந்து வந்த சரக்கு கப்பல் மோதியது. இதில், போர் கப்பலுக்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டது.இந்திய கடற்படைக்கு சொந்தமான கோரா என்ற போர்க்கப்பல், போர்ட் பிளேயரில் இருந்து விசாகப்பட்டினம் கடற்கரை அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் வந்து கொண்டிருந்தது. அப்போது, வங்கதேசத்தில் இருந்து கொழும்புக்கு சரக்கு ஏற்றிய கப்பலும் அவ்வழியே வந்தது. இந்நிலையில், இந்திய போர்க் கப்பல் மீது சரக்கு ஏற்றி வந்த கப்பல் மோதியது. இதில், போர்க்கப்பலுக்கு லேசான சேதம் ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.விபத்தை ஏற்படுத்திய கப்பல், பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மார்ஷல் தீவுக்கு சொந்தமானது என தெரியவந்தது. சரக்கு கப்பல் ஊழியர்களிடம், இந்திய கடற்படையினர் விசாரணை நடத்தினர். மோதல் சம்பவம் ஒரு விபத்து என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அந்த கப்பல் செல்ல அனுமதிக்கப்பட்டது.