சனா: ஏமன் நாட்டில், அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இடையே நடந்த சண்டையில் 60 பேர் பலியாகியுள்ளனர்.ஏமன் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகளுக்கும், கிளர்ச்சியாளர்களான குர்தீஸ் பிரிவினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ஏமன் தலைநகர் சனா, ஹுதைதாவில் உள்ள சிவப்பு துறைமுக நகரம் ஆகியவற்றை பிடிப்பதில், அல்கொய்தா மற்றும் குர்தீஸ் பிரிவினர் இடையே போட்டி இருந்து வருகிறது. அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு, சன்னி பிரிவு பழங்குடியினர் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று தெற்கு சனாவில் உள்ள ராடே பகுதியில், கிளர்ச்சியாளர்கள் அமைத்திருந்த சோதனை சாவடியில், அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் குழந்தைகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இருபிரிவினர் இடையே நேற்று இரவு கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், அல்கொய்தா தீவிரவாதிகள் சிலரை குர்தீஸ் பிரிவினர் சிறைபடுத்தினர். மற்றொரு கார் குண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். சனா நகரில் நடந்த சண்டையில் இருதரப்பினரும் சக்திவாய்ந்த குண்டுகள், பீரங்கிகளை பயன்படுத்தினர். இந்த மோதல் பல மணி நேரம் நீடித்தது. தாமரில் உள்ள அனாஸ் மாவட்டத்தில் நடந்த சண்டையில் 10 பேர் பலியாகினர். ஏமனில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதல் மற்றும் குர்தீஸ் பிரிவினர் இடையே ஆங்காங்கே நடைபெற்ற மோதலில், மொத்தம் 60 பேர் பலியாகி உள்ளனர்.