ஜெர்மனியில் உரங்களுக்கு திடீர் தடை: விவசாயிகள் போராட்டம்
மெயின்ஸ்: ஜெர்மனியில் நைட்ரேட் உரங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெர்மனியில் நெல், கோதுமை போன்ற பயிர்கள் மற்றும் காய்கறிகள் விளைச்சலுக்காக விவசாயிகள் பயன்படுத்தும் நைட்ரேட் செயற்கை உரங்களால், 15 சதவீதத்துக்கும் அதிகமான நிலத்தடி நீர் கெட்டு போனது ஆய்வில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நிலங்களில் நைட்ரேட் செயற்கை உரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதைக் கண்டித்து பவேரியன் மாநிலம் மைன்ஸ் நகரை சேர்ந்த விவசாயிகள் தங்கள் மாடுகளுடன் வந்து போராட்டம் நடத்தினர். மாடுகள் போடும் சாணம் கீழே விழாதபடி, பெரிய டயாபரை கட்டி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.இந்நிலையில், ஐரோப்பிய நில பாதுகாப்பு கமிஷன் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் ஸ்கல்ஸ் கூறுகையில், ‘நிலங்களுக்கு விவசாயிகள் நைட்ரேட் அடங்கிய செயற்கை உரங்களை போடுவதால், நிலத்தடி நீர் மாசுபடுகிறது. இதைத் தடுக்க செயற்கை உரங்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டது. மாடுகள் போடும் சாணம், இயற்கை உரத்தை சார்ந்தவை. அதற்கு எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை‘ என்றார்.