இ-சிகரெட் விற்பனைக்கு தடை: மத்திய அமைச்சர் தகவல்
புதுடெல்லி: உலகிலேயே புகை பிடித்தல் மற்றும் புகையிலை காரணமாக ஏற்படும் புற்று நோயால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனவே இதனை குறைப்பது குறித்து மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:சிகரெட் பாக்கெட்டுகளின் இரு புறத்திலும் சுமார் 80 சதவீத இடங்களை பிடிக்கும் வகையில் புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் 4 புதிய படங்களை அச்சடிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதே போல் இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிகரெட் பாக்கெட்டுகளில் இடம் பெறும் புற்றுநோய் குறித்த 4 படங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அதே போல் அதன் மேற்புறங்களில் சுமார் 15 சதவீத இடத்தில் புகையிலை எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெறு வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவை அனைத்தும் ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இ-சிகரெட் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடை செய்வது குறித்து இம்மாத இறுதியில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.