திமுக பஞ்., தலைவர் வீட்டுக்கு தீ வைப்பு
உடன்குடி:உடன்குடி அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் ராஜன்(38). மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவரான இவர் திமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி வினோலியா பொன்னுத்தாய். உடன்குடி யூனியன் முன்னாள் துணைச் சேர்மனாக இருந்தார். அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்ததால் துணை சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார். இவர்களது வீட்டின் முன்புறம் ஓலை குடில் போட்டுள்ளனர். நேற்று இரவு ஜெபராஜ் ராஜன் குடும்பத்துடன் ஓலை குடிலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் குடிலுக்கு தீவைத்து விட்டு ஓடிவிட்டனர். தீ எரிவது தெரியாமல் ஜெபராஜ் ராஜன் குடும்பத்தினர் அயர்ந்து தூங்கினர். தற்செயலாக தீ எரிவதைக் கவனித்த பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பஞ்சாயத்து தலைவர் குடும்பம் உயிர் தப்பியது. இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசில் ஜெபராஜ் ராஜன் புகார் செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.